ஐதராபாத்:

பல்வேறு சர்ச்சைகளுக்கும், ஊழல் முறைகேடுகளுக்கும் பெயர் பெற்ற ஐ.பி.எல் தற்போது பல ஏழை இளம் வீரர்களை கோடீஸ்வரர்களாக உருவாக்க தொடங்கியுள்ளது. 10ம் ஆண்டில் அடித்து வைக்கும் டி20 போட்டி ஐபிஎல் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் வெகு ஜோராக நடந்து வருகிறது.

இதற்கு முன் இல்லாத வகையில் ஏழை வீரர்களை தேர்வு செய்வதில் அணி முதலாளிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பதான், பாண்டிய சகோதரர்கள், இக்பால் அதுல்லா, நாது சிங், கம்ரான் கான் ஆகியோர் தற்போது புதிய கோடீஸ்வரர்களாக மாறியுள்ள ஏழை வீரர்கள்.

இந்த வரிசையில் தற்போது ஐதராபாத்தை சேர்ந்த 22 வயதாகும் ஆட்டோ டிரைவரின் மகன் முகமது சிராஜ் என்ற வீரர் இணைந்துள்ளார். இவரை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி ரூ. 2.6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இவரது ஆரம்ப விலை ரூ. 20 லட்சமாகும்.

குறுகிய காலமான 3 ஆண்டுகளில் சிராஜூக்கு இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிராஜ் கூறுகையில்,‘‘ நான் இவ்வளவு விலைக்கு ஏலம் போவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏதேனும் ஒரு சில அணிக்கு இந்த ஆண்டு விளையாடுவதற்கு ஏற்ப தயாராக இருந்தேன். ஆனால், இவ்வளவு அதிக விலைக்கு நான் ஏலம் எடுக்கப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை.

முதலில் ஒரு அழகான வீடு வாங்க வேண்டும். அதன் பிறகு தான் மீதமுள்ள பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வேன். சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறேன். ஆனால், முறையாக பயிற்சி பெற எந்த அகாடமியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

குடும்ப ஏழ்மையை போக்கும் வகையில் படித்துவிட்டு ஏதேனும் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்று தான் என் பெற்றோர் நினைத்தனர். ஆனால் நான் கிரிக்கெட்டில் ஈர்க்கப்பட்டேன். தெருவில் டென்னிஸ் பந்து கொண்டு விளையாடினேன். ஷபா ஜூனியர் கல்லூரியில் சேர்ந்து படிக்க முயற்சித்தபோதும், எனக்கு அதில் ஆர்வமில்லை. கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தை பெற வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது’’ என்றார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கோல் ஆக்ரிலிக் 3 சீசன்களில் விளையாடினார். இது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு அடுத்த சீசனில் சார்மினார் கிரிக்கெட் கிளப்பின் 2 நாள் லீக் ஆட்டத்தில் அற்புதமாக விளையாடினார். இது போன்ற இவரது விளையாட்டு தான் அணி தேர்வாளர்களை கவர்ந்தது. இதுல் இவர் வீழ்த்திய 5 விக்கெட் சாதனை தான் ஐதராபாத்தில் யு 23 அணியில் இடம்பெற வாய்ப்பாக அமைந்தது. தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வந்த சிராஜ் முன்னணி ப ந்துவீச்சாளர் பட்டியலில் இணைந்தார்.

சிராஜ் மேலும் கூறுகையில், ‘‘2015ம் ஆண்டில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் எனக்கு நல்ல போட்டியாக அமையவில்லை. அதனால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அருண் மற்றும் கேப்டன் பத்ரினாத் தான் எனது வாழ்க்கையை செதுக்கிய சிற்பிகள். என்னை ஊக்குவித்து எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர்’’ என்றார்.

‘‘இந்திய ஏ அணி சார்பில் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றேன். ஆனால் அங்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே சமயம் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்களின் திறமையை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது’’ என்றார் இந்த நம்பிக்கை நட்சத்திரம்.