சென்னை: ஆட்டோ கட்டணம் உயர்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சில ஆண்டுகளாக ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வரும் நிலையில், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து, ஆட்டோ கட்டணம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக ஆட்டோ கட்டணம் உயர்வு அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பல முறை தொழிற்சங்கத்தினர் முறையிட்டு, அரசு முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து, பிப்ரவரி 1ந்தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு என ஆட்டோ டிரைவர்கள் கூட்டமைப்பு சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, முதல் 1.8 கி.மீ.க்கு ரூ.50, கூடுதல் கி.மீ.க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணமாக நிமிடத்துக்கு 1 ரூபாய் 50 காசு, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது.
இதற்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மக்களிம் அதிக ஆட்டோ கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அறிவித்தது.
இந்த நிலையில், இன்று, ஆட்டோக்களுக்கான புதிய பயணக் கட்டணம் நிர்ணயிப்பது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துச் செயலர், ஆணையர், மண்டல அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மீட்டர் கட்டணம், பைக் டாக்ஸி பிரச்னை, ஆட்டோ டாக்ஸி செயலி குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். எனவே, விரைவில் புதிய ஆட்டோ கட்டணம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.