உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவது ஏன்? – விஜயகாந்த் விளக்கம்

Must read

ri
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் பிரசாரத்தை நேற்று மாலை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
விஜயகாந்த் ஏற்கனவே வெற்றிபெற்ற விருத்தாசலத்தில் போட்டியிடுவாரா? அல்லது ரிஷிவந்தியத்தில் போட்டியிடுவாரா? என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். எனக்கு அதிக குக்கிராமங்கள் உள்ள தொகுதிதான் மிகவும் பிடிக்கும். அதனால்தான் உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தேன். விவசாயத்தையும், நெசவையும் முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே என் ஆசை.
முதலில் இங்கு அரசு கலைக்கல்லூரி, நவீன அரசு மருத்துவமனை கட்டுவதே எனது லட்சியம். ரிஷிவந்தியம் தொகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை, அ.தி.மு.க., தி.மு.க. அரசு செய்ய முடியாததை நான் செய்திருக்கிறேன். அந்த பாலத்தை கட்டுவதற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.20 கோடி நிதி பெற்றுள்ளேன். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
என்னை வெற்றிபெற செய்தால் பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்துவேன். அனைத்து குழந்தைகளையும் படிக்க வைப்பேன். பள்ளிகளில் காலை, மாலை என இருவேளையும் உணவு வழங்கப்படும். படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வேலை கொடுப்பேன்.
தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். தி.மு.க.வினர் அ.தி.மு.க.வையும், அ.தி.மு.க. வினர் தி.மு.க.வையும் குறை கூறுவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனது தலைமையிலான ஆட்சி அமைந்ததும், இவை அனைத்தும் மாறும். தமிழகம் வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

More articles

Latest article