eu
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட கடந்த 22–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
234 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 7149 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று காலை 11 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அந்த பரிசீலனை வீடியோவில் முழுமையாக படம் பிடித்து பதிவு செய்யப்பட்டது.
நேற்று மாலை மனுக்கள் பரிசீலனை முடிந்தது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 2618 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தள்ளுபடி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்களாகும். 4 தொகுதிகளில் மட்டும் பா.ம.க. வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடியானது. மற்ற படி அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டன.
தள்ளுபடியான வேட்பு மனுவை கொடுத்திருந்தவர்களில் 90 சதவீதம் பேர் ரூ.10 ஆயிரம் டெபாசிட் பணம் கட்டாததால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தனர். இதைத் தொடர்ந்து 10 பேர் முன் மொழியாதவர்களின் மனுக்களும் அதிக அளவில் தள்ளுபடியானது.
வேட்பு மனுவை நாளை (திங்கட்கிழமை) வாபஸ் பெறலாம். நாளை பிற்பகல் 3 மணி வரை மனு வாபஸ் பெற அவகாசம் வழங்கப்படும்.
எனவே நாளை நிறைய பேர் மனுவை வாபஸ் பெற வாய்ப்புள்ளது. மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நாளை திரும்பப் பெறப்படும்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் போட்டியில் உள்ளனர் என்ற விவரம் தெரியவரும். அதன்பிறகு ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப் படும்.
நாளை மாலை இறுதிப்பட்டியல் விவரத்தை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிடும். அப்போது எந்த தொகுதியில் நிறைய வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், எந்தெந்த தொகுதிகளில் அதிக போட்டி இல்லை என்பன போன்ற விவரங்கள் தெரியவரும்.