சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றுங்கள் – சீறும் கதர்ச்சட்டைகள்

Must read

siva11
சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீராஜ் சொக்கர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி கோஷ்டியினர் தங்களின் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் விருதுநகர் எக்ஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு இப்படி ஒரு கோரிக்கை வைத்திருக்கின்றனர் .
சிவகாசி எங்கள் சொந்த மண். சிவகங்கைக்காரர் ஆன நீங்கள் சிவகாசி தொகுதியில் உள்ள பழமையான காங்கிரஸ் தொண்டர்கள் பலம் தெரியாமல், வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அநியாயம் இழைத்து விட்டீர்கள். கட்சிக்கு களங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காக இதுவரை உங்களை பொறுத்துக் கொண்டோம். இனி உங்களை கட்சியில் இருந்து விரட்டி அடிப்போம்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இறந்த போது எங்கள் வீட்டில் ஒருவர் இறந்தது போல் மொட்டை அடித்து துக்கம் அனுசரித்தோம். உங்களைப் போல் யார் காலைப் பிடித்தும் கட்சியில் பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அந்த தேசிய தலைவர்கள் ஆசி மட்டும் எங்களுக்கு போதும்.
யார் இந்த சொக்கர்?
கடந்த சட்டசபை தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விருதுநகர் தே.மு.தி.க. வேட்பாளர் மாஃபா பாண்டிய ராஜனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அனைவருக்கும் இங்கே ஓரு கேள்வி எழும். இவர்கள் இருவருக்கும் அப்படி என்ன சம்பந்தம் என்று. காரணம் ஓரே ஜாதி தான். சிவகாசி மற்றும் விருதுநகரில் ஏன் அந்த ஜாதியை தவிர வேறு ஜாதியினர் அனைவரும் வாக்குரிமை இல்லாதவர்களா?
சொக்கர் பச்சோந்தி என்பதற்கு இன்னொரு எடுத்துக் காட்டு. கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா விற்கு ஆதரவாக விருதுநகர் நகரசபை தேர்தலில் வேலை பார்த்தார். அவரது மகன் ஸ்ரீராஜ் சொக்கருக்குத்தான் இப்போது சிவகாசி தொகுதியின் வேட்பாளர் ஆக்கியிருக்கின்றீர்கள்.
சிவகாசி பக்கம் தயவுசெய்து ஓட்டு கேட்டு வர வேண்டாம். டில்லியிலேயே இருந்து விடுங்கள். இங்கு உங்களுக்கு ஜால்ரா போட யாரும் இல்லை.
சிவகாசி தொகுதியின் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு, முன்னாள் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேசனுக்கு ஆதரவாகவும் மாணிக்கம் தாகூருக்கு எதிராகவும் அதிருப்தி கோஷ்டியினர் இப்படி குரல் கொடுத்து வருகின்றனர்.

More articles

Latest article