asu
சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் உயர் பதவிகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி வருகிறது. நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டார்.
அவரை உடனடியாக பதவி ஏற்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மாற்றப்பட்ட போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருப்பதால் அவர் நேற்று மாலை 4 மணி அளவில் தனது சக அதிகாரிகளிடம் விடை பெற்று சென்றார். புதிய போலீஸ் கமிஷனர் அசுதோஷ் சுக்லா நேற்று இரவு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.
அவருக்கு பூச்செண்டு கொடுத்து கூடுதல் கமிஷனர்கள் வரதராஜூ, சேஷசாயி, சங்கர், அருணாச்சலம், அபய்குமார் சிங் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். புதிய கமிஷனர் அசுதோஷ் சுக்லா அதன் பின் கமிஷனர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.
அசுதோஷ் சுக்லா தமிழகத்தில் அதிக அளவில் பணியாற்றவில்லை. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட இமாம் அலி பெங்களூருவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த போலீஸ் நடவடிக்கையில் அசுதோஷ் சுக்லா முக்கிய பங்காற்றியவர். இதனால் அவருக்கு மிரட்டல்கள் இருந்தது.
இதையடுத்து அவர் தீவிர பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறார். அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் எப்போதும் இருப்பார்கள். அசுதோஷ் சுக்லா பதவி ஏற்ற உடன் உயர் போலீஸ் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.
சென்னை போலீஸ் புதிய கமிஷனராக அசுதோஷ் சுக்லா பதவி ஏற்றவுடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சென்னையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதை சமாளிக்கவும், துணை ராணுவ படை வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
தேவைப்பட்டால் கூடுதல் துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள். தேர்தல் பிரச்சினை சம்பந்தமாக பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் 9566555333 என்ற எனது செல்போன் எண்ணில் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு பேசலாம். எஸ்.எம்.எஸ். மூலமும் தகவல் அனுப்பலாம். இவ்வாறு அசுதோஷ் சுக்லா கூறினார்.