கிருஷ்ணகிரி:  ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நேரிடும் என்று அரசு எச்சரித்துள்ளது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ  பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தையொட்டியுள்ள மாநில எல்லை பகுதிகளில் வாகன சோதனையை அதிகாரிகள்  தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் இ பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. வெளிமாநிலங்களில் இருந்து இ பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்ப அனுப்பப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்டங்களை ஒட்டிய கேரள மாநில எல்லை பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்தை ஒட்டிய எல்லை பகுதிகளிலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு உள்ளனர்.