ஆஸ்திரேலியாவில் பணி நேரத்துக்குப் பின் வரும் வேலைக்கான அழைப்புகளைப் புறக்கணிப்பதற்கான உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரம் முடிந்த பின் பணி தொடர்பாக வரும் “நியாயமற்ற” போன் அழைப்புகளை மறுக்கும் உரிமையை வழங்கும் இந்த சட்ட திருத்தம் அத்தகைய அழைப்புகளுக்கு பதிலளிக்காத ஊழியர்களை தண்டிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க சட்ட திருத்தம் செய்துள்ளது.

“ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் ஊதியம் பெறாத ஒருவர் 24 மணி நேரமும் ஆன்லைனில் இல்லாமலும், வேறு வகையிலும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படக்கூடாது” என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆஸ்திரேலிய செனட் சபையில் வியாழன் அன்று நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா தற்போது இறுதி ஒப்புதலுக்காக பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம் இதனையடுத்து ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு அழுத்தம் தரும் இதுபோன்ற அழைப்புகளில் இருந்து விடுவிக்க ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் அனைத்தும் இதுபோன்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொழிலாளர் நலனை பாதுகாக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் கொன்றுவரப்பட்டுள்ள இந்த சட்டம் தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.