ஷார்ஜா: பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை, முழுமையாக கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஷார்ஜாவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியையும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 327 ரன்களை குவித்துவிட்டது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் குவாஜா ஆகிய இருவரும், தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் வலுவான அடித்தளத்தை அமைத்துவிட்டனர். உஸ்மான் குவாஜா, தொடர்ச்சியாக கடந்த 10 ஒருநாள் போட்டிகளிலும் தனது பங்கை சிறப்பாகவே செய்து வருகிறார்.

இவர்கள் தவிர, ஷான் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் போன்றோர், ரன்களுக்கான தங்களின் பங்கை முடிந்தளவிற்கு செய்தனர். மேக்ஸ்வெல், 33 பந்துகளில் 70 ரன்களை சேர்த்துவிட்டார். இதுபோன்ற அதிரடிகள் இவருக்கு சகஜமாகவே உள்ளது.

ஏற்கனவே 4 போட்டிகளில் தோற்றிருந்து, 5வது போட்டியையாவது ஜெயிக்கலாம் என்ற ஆசையிலிருந்த பாகிஸ்தானுக்கு 327 ரன்கள் என்பது ஏடாகூடமான இலக்குதான்.

ஆனாலும் அவர்கள் தளரவில்லை. அந்த அணியின் ஹாரிஸ் சொஹைல் 129 பந்துகளில் 130 ரன்களை விளாசினார். ஷான் மசூத் மற்றும் உமர் அக்மல் போன்றோரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து முறையே 50 மற்றும் 43 ரன்களை எடுத்தனர்.

பாகிஸ்தான் வென்றுவிடும் என்ற நம்பிக்கை துளிர்த்த நிலையில், 40வது ஓவருக்கு மேல் எல்லாம் பொய்த்துவிட்டது. இறுதிவரை போராடி, 307 ரன்களை எடுத்து, கெளரவமான தோல்வியை சந்தித்து, இந்த தொடரை மொத்தமாக பறிகொடுத்தனர் பாகிஸ்தான் அணியினர்.

– மதுரை மாயாண்டி