ஐதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

ராயல் சேலஞ்சர் அணியின் கேப்டன் விராத் கோலி, டாஸ் வென்றும்கூட, பேட்டிங்கிற்கு சாதகமான ஒரு பிட்சில், ஐதராபாத் அணியை பந்துவீச அழைத்து, ஒரு மோசமான தவறை செய்தார்.

ஆனால், தான் செய்த தவறை அவர் முழுதாக உணர்வதற்குள்ளேயே, பேயாட்டம் ஆடிவிட்டது ஐதராபாத் அணி. ஆட்டத்தின் முடிவில், கோலியின் அணிக்கு வெற்றி இலக்காக 232 என்ற சாகச எண் நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை விரட்டுவது என்னதான் கோலிக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், எல்லா நேரத்திலும், எல்லா இலக்குகளும் வசப்பட்டு விடுவதில்லை. ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களின் தொந்தரவு மோசமானதாக இருந்தது. முடிவில், 113 ரன்களையே எடுத்து துவண்டுபோனது கோலியின் அணி.

56 பந்துகளில் 114 ரன்களை தன் அணிக்குப் பெற்றுத்தந்த பேர்ஸ்டோ, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

– மதுரை மாயாண்டி