ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா: மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த கல்வித்துறை உத்தரவு

Must read

சென்னை:

மிழகம் முழுவதும் வருகிற 15ம் தேதி பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது,

சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றையும், போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களையும், தேசியக்கொடி வரலாற்றையும் மாணவர்களுக்கு எடுத்து சொல்லும் வகையில், வருகிற 15ம் தேதி அன்று சுதந்திர தின விழாவை அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

முன்னதாக பள்ளி வளாகத்தை காகிதங்களாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும். வருகிற 15ம் தேதி காலை தேசிய கொடியை பள்ளி வளாகத்தில் ஏற்றி மிக சிறப்பாக விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள், கண்காட்சி, நாடகம் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளில் நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டு போட்டி நடத்தி வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும். போதிய இடவசதி இருந்தால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடலாம்.

பள்ளி வளாகத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர்கள், சுதந்திர தின போராட்ட வீரர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும். சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிகள் சார்பில் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article