கசராகாட்:

கசராகாட் என்ற மாவட்டம் கேரளாவிவ் வடக்கு எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு 12 ஆண்டுக்கு ஒரு முறை கோவில் திருவிழா நடக்கும். இந்த விழாவில் மொகெராவை என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 2 பேர் தங்களது இறுதி சடங்கு நிகழ்வுகளை உயிரோடு நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். இது 400 ஆண்டுகளாக அங்கு நடந்து வருகிறது. இது குறித்து செய்தியை நியூஸ் மினிட் என்ற ஆங்கில இணையதள செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்…

இந்த ஆண்டு இதற்கு மொகெரா சமூகத்தை சேர்ந்த ஆனந்தா, பாபு ஆகியோர் ஜாம்ப்ரி குகைக்குள் சென்று மண் எடுத்து வரும் பூசாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கசராகாட் மாவட்டத்தில் உள்ள நெட்டாங்கி, பெல்லூர் ஊராட்சியில் உள்ள மகாலிங்கேஸ்வரா கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக ஜாம்ப்ரி குகையில் மண் எடுக்கும் நிகழ்வு நடக்கும். ஜாம்ப்ரி குகை கேரளா&கர்நாடகா எல்லையில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த சமூகத்தின் புனிதமாக இந்த குகை கருதப்படுகிறது.

இதன் வரலாறு என்னவென்றால்….

காரா என்ற முனிவர் கடும் தவம் செய்தபோது சிவபெருமான் அவர் முன் தோன்றி 3 சிவலிங்கங்களை பரிசாக அளித்தார். அதில் 2 சிவலிங்கங்கள் நெட்டாங்கி கோவில் உள்பட 2 கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு சிவலிங்கம் ஜாம்ப்ரி குகையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நெட்டாங்கி கோவிலில் திருவிழா நடக்கும். இந்த 2 நபர்களும் தந்திரிகளாக அந்த குகைக்குள் சென்று மண் சேகரித்து வந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். இது புனிதமாக கருதப்படுகிறது. ‘‘ஸ்வர்ன காவடி பிரசனம்’’ என்று அழைக்கப்படும் இந்த விழாவில் கலந்து கொள்ள 2 நபர்களும் குறி சொல்பவர் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

‘‘இந்த பணியை அந்த இருவரும் மேற்கொள்வதற்கு முன் மனித வாழ்க்கையில் அவர்கள் அனைத்து பணி, பொறுப்பு, கடமைகளை நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் கப்படான் என்று அழைக்கப்படுவார்கள்’’ என்று மகாலிங்கேஸ்வரா கோவில் அறங்காவலர் தாமோதரா மணியனி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ஆனால் இந்த முறை குறிசொல்பவரால் தேர்வு செய்யப்பட்ட ஆனந்தா என்பவர் திருமணம் ஆகாதவர். மனிதனாக அனைத்து கடமையையும் முடித்தவர் தான் இதற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் அவருக்கு அவசர அவசரமாக திருமணம் நடத்திவைக்கப்பட்டு, 6 நாட்கள் கீதா என்ற அந்த பெண்ணுடன் தங்கியிருந்தார். அதன் பின்னர் அந்த இருவருக்கும் இறுதி சடங்கின் போது செய்யப்பட்டு அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களும் செய்யப்பட்டது’’ என்றார்.

இந்த நடைமுறை முடிந்தவுடன் அவர்கள் இறந்துவிட்டதாக கருதப்படுவார்கள். இதன் பின்னர் அவர்கள் ரகசிய இடத்தில் குடிசையில் தங்க வைக்கப்படுவார்கள். அவர்கள் தனிமையில் 48 நாட்கள் வசித்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பிட்ட சிலர் மட்டும் அவர்களுக்கு உணவு வழங்குவார்கள். இந்த கப்படான்கள் பச்சை தென்னங் கீற்றில் தான் படுத்து தூங்க வேண்டும். வரும் மே 2ம் தேதி வரை அவர்கள் யாரையும் அவர்கள் பார்க்க கூடாது.

குகைக்குள் செல்லும் நாள் அன்று அரை நாள் அவர்கள் சில சடங்குகளை மேற்கொள்வார்கள். ஜாம்ப்ரி குகைக்குள் அவர்கள் 2 முதல் 3 மணி நேரம் வரை தங்கி இருப்பார்கள். ‘‘குகைக்குள் என்ன நடந்தது என்பதை யாரும் அறிய கூடாது. உள்ளே என்ன பார்த்தார்கள், என்ன நடந்தது என்பதை கப்படான்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. இந்த ரகசியம் அவர்கள் இறக்கும்போது சேர்த்து புதைக்கப்பட வேண்டும். அந்த குகைக்குள் இருந்து அவர்கள் வெளியே வந்தவுடன் 48 நாட்கள் இறப்புக்கு பின் அவர்கள் மறுபிறப்பு பெற்றதாக கருதப்படுவார்கள்’’ என்றார் மணியனி.

மணியனி தொடர்ந்து கூறுகையில், ‘‘பெரும்பாலும் குகையில் இருந்து பாம்பு தோல்கள், ஊர்வன எலும்பு கூடுகள் போன்றவற்றை கொண்டு வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் அனைத்தும் புனிதமாக கருதப்படும். அவை அனைத்தும் கோவிலுக்கு அருகிலேயே புதைக்கப்பட்டுவிடும்.

கப்படான்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவார்கள். அவர்கள் தலையில் பாரம் சுமக்க கூடாது. உழவு பணியில் ஈடுபடக்கூடாது. அவர்களுக்கு விவசாயம் தான் பிரதான வருவாய் என்றபோதும், அவர்களுக்கு செலவு மற்றும் இதர வாழ்க்கை தேவைகளை கோவில் நிர்வாகம் வழங்கும்’’ என்றார்.

‘‘அதேபோல் மென்சஸ் ஆகும் பெண்களுடன் பேசக் கூடாது. அவர்களுடன் நேரம் கழிக்க கூடாது. வீட்டில் இருக்கும் பெண்களின் மென்சஸ் காலத்தில் இவர்கள் கோவிலில் தங்கியிருக்க வேண்டும். இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலகும் கப்படான் பெரும் சோதனைகளை சந்திக்க நேரிடும். கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட ஒரு கப்படானுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது. அதனால் வேறு ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். அவர் கட்டுப்பாட்டை மீறியதால் இது போல் நடந்துவிட்டது என்று நம்பப்படுகிறது’’ என்று மணியனி தெரிவித்தார்.

கப்படான்கள் உயிருடன் இருக்கும் போதே இறுதிச் சடங்குகள் செய்துவிட்டபடியால் அவர்கள் இறக்கும் போது இறுதி சடங்குகள் எதுவும் நடத்தப்படாது. பல நூற்றாண்டுகளாக இந்த ஜாம்ப்ரி குகை சடங்கு நடந்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டில் பல குகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜாம்ப்ரி குகையுடன் தொடர்பு கொண்டவை என்று கிராம மக்களால் நம்பப்படுகிறது.