டெல்லி
டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி உத்தரபிரதேசத்தை போல டெல்லியிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.
கடந்த 5-ந் தேதி 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு நேற்று வெளியானது. இதன்படி 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தது.
மொத்தம் 22 இடங்களை மட்டுமே பிடித்த ஆம் ஆத்மியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.
டெல்லியின் முன்னாள் முதல்-வர் அதிஷி செய்தியாளர்களிடம்,
”டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அகற்றப்பட்ட 3 நாட்களுக்குள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மின்வெட்டுகள் குறித்து 40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் இப்போது இன்வெர்ட்டர்களை வாங்க தொடங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் மின்சாரத்துறை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது, பாஜக ஆட்சிக்கு வந்த 3 நாட்களில் அது தலைகீழாக மாறிவிட்டது. பாஜகவுக்கு ஆட்சி செய்வது எப்படி என்று தெரியவில்லை. மணிக்கணக்கான மின்வெட்டுக்கு பெயர்போன உத்தரபிரதேசத்தை போல டெல்லியை மாற்ற பாஜக விரும்புகிறது
எனத் தெரிவித்துள்ளார்.