ஜெனிவா: ஐரோப்பா கண்டத்தில் இந்த ஆண்டின் கடும்  கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக  உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. ஜூன்-ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்கள்,  ஐரோப்பாவில் அதிகஅளவில் வெப்பம் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை கொரோனா தொற்று புரட்டிப்போட்டது. இதில் ஐரோப்பிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், நடப்பாண்டு, கோடை காலத்தின்போது, காணப்பட்ட கடுமையான வெப்பத்துக்கு  15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக  உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குனர் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இதுவரை கிடைத்த தகவலின்படி, ஐரோப்பாவில் நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் 3 மாதங்களில், கடும் வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஜெர்மனி நாட்டில் அதிக அளவாக 4 ஆயிரத்து 500 பேர், ஸ்பெயின் நாட்டில் 4 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். இங்கிலாந்தில் 3,200 பேரும், போர்ச்சுகல்லில் ஆயிரத்திற்கும் கூடுதலானோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளதுடன்,  இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அவர் எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.

அதுபோல, நடப்பு ஆண்டு 2022-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 22-ந்தேதி வரையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என பிரான்ஸ் நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் பொருளாதார படிப்புகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.

இது கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகம். இதற்கு, நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தின் மத்தியில், முதலில் வெப்ப அலை தொடங்கி பின்பு, அது ஜூலை மாத மத்தியில் கடும் வெப்ப அலை பரவலானபோது அதனால் மக்களில் பலர் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்து உள்ளார்