தமிழகம், புதுச்சேரி, கேரளா, உள்பட 5 மாநிலங்களில்  நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

Must read

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (ஏப்ரல் 6ந்தேதி) தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அத்துடன் அஸ்ஸாம் மாநிலத்தில்வ இறுதி மற்றும் 3வது கட்ட வாக்குப்பதிவும், மேற்கு வங்க மாநிலத்தில் 3வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

தேர்தல் வாக்குப்பதியை முன்னிட்டு, மேற்கண்ட பகுதிகளில் நேற்று (4ந்தேதி) இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பும் பணிகளையும், வாக்குச்சாவடி அதிகாரிகளையும் அனுப்பும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஆண் வேட்பாளர்கள்  3 ஆயிரத்து பேர் பெண் வேட்பாளர்கள் 411  பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் அடங்குவர்.

இறுதிக் கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பொதுக்கூட்டத்துடன் பிரசாரத்தை நிறைவு செய்தார். இதையடுத்து, தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டும் வாக்கு சேகரித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூரில் பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்தார். டிடிவி தினகரன் கோவில்பட்டியிலும், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும் இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இவற்றுடன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 ‘விவிபேட்’ கருவிகளும் இணைக்கப்பட உள்ளன. வாக்களிக்க 6.28 கோடி பேரும்,  வாக்குப்பதிவுக்காக 88,900 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது..

தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்

புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளும், கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில்  4,72,650 ஆண் வாக்காளர்கள், 5,31,431 பெண் வாக்காளர்கள் மற்றும் 116 மூன்றாம் பாலின வாக்காளர்கள்  வாக்களிக்க தயாராக உள்ளனர். மொத்ம்  10,04,197 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். வில்லியனூர், ஓஷுகராய் மற்றும் அரியான்குப்பம் தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் உள்ளனர், ஆர்லியன்பேட்டை, ராஜ் பவன் மற்றும் உப்பலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்டுள்ளன. வில்லானூரில் 42,329, ஓசுகரை 41,890, அரியான்குப்பம் 39,001, ஆர்லியன்பேட் 24,723, ராஜ் பவன் 26,349, உப்பலம் 27,913 வாக்காளர்கள் உள்ளனர்.

கேரள  மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள மலப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.  140 தொகுதிகளை உள்ளடக்கிய கேரள மாநிலத்தில் 2016 தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 91 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜக நேமம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மலப்புரம் தொகுதி எம்.பியாக இருந்த IUML கட்சியின் குன்ஹாலிகுட்டி தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு  ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், நாளை 3வது கட்டம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் 8கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 294 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்திவ்ல , இதுவரை 2 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை 3வது கட்டமாக  31 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. 5 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More articles

Latest article