டெல்லி: தெலுங்கானா, சத்தீஸ்கர் , மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய  5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,  சத்தீஸ்கர் மாநிலத்தில்  நவம்பர் 7  மற்றும் 17 ஆம் தேதிகளில்  இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நவ., 17ல்  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நவம்பர் 7 ஆம் தேதி மிசோரம் மாநிலத்திலும்,  நவம்பர் 23 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலும், நவம்பர் 30 ஆம் தேதி தெலங்கானா மாநிலத்திலும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ந்தேதி நடைபெறுகிறது.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் தேதிகளை வெளியிட்டார்.  அதன்படி, மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7ஆம் தேதியும், 17ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும் தேர்தல் நடத்தப்படும்.  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்  டிசம்பர் 3 என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“கடந்த 40 நாட்களில் 5 மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சிகள், மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகளுடன் கலந்துரையாடினோம். மிசோரத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சத்தீஸ்கரில் 2.03 கோடி வாக்காளர்களும் மத்தியப் பிரதேசத்தில் 5.6 கோடி வாக்காளர்களும் உள்ளனர். ராஜஸ்தானில் 5.25 கோடி வாக்காளர்களும் தெலங்கானாவில் 3.17 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.

5 மாநில தேர்தல்களில் சுமார் 60 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் (18-19 வயது) பங்கேற்பார்கள். இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2900க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இளைஞர்களால் நிர்வகிக்கப்படும். 17,734 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். 621 வாக்குச் சாவடிகள் பொதுப்பணித்துறை ஊழியர்களால் நிர்வகிக்கப்படும். மகளிர் காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பில் 8,192 வாக்குச் சாவடிகள் இருக்கும்.

ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்காக, 679 சட்டப்பேரவை தொகுதிகளில் 1.77 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

ஐந்து மாநிலங்களின் எல்லைகளில் 940க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. எல்லைகளை தாண்டி சட்டவிரோதமாக பணம் கடத்தப்படுகிறதா, மதுபானம், இலவசங்கள் மற்றும் போதைப்பொருள்கள் ஆகியவை கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை செய்யப்படும்” என்றார்.

பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம் 230 தொகுதிகளிலிருந்தும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் சட்டமன்றம் 200 இடங்களிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும். தெலுங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி 119 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு எதிராக மோதவுள்ளது.

90 இடங்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டமன்றத்தில், காங்கிரஸ் பாஜகவுடன் மோதத் தயாராக உள்ளது, அதே நேரத்தில் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான மிசோரமின் 40 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இரு கட்சிகளும் காலூன்ற முயற்சிக்கும்.

இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள்  2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.