வுகாத்தி

பாஜகவுக்கு தேர்தல் பிரசார பாடல் பாடிய அசாம் மாநில பாடகர் ஜுபின் கர்க் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அளித்துள்ளது.   அதன்படி பாகிஸ்தான், வங்க தேசம்,  ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடி புகுந்தவர்களில் சில இனத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.   இதற்கு எல்லைப் புற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திரிபுரா மற்றும் அசாம் மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது.   இந்த போராட்டத்தின் எதிரொலியாக திரிபுராவில் இணையச் சேவைகள் 48 மணி நேரத்துக்கு நிறுத்தப்பட்டது.   அசாமிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அசாம் மாநிலத்தின் புகழ் பெற்ற பாடகரான ஜுபின் கர்க் கடந்த 2016 ஆம் வருட சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜகவுக்கான பிரசார பாடல்களை பாடி உள்ளார்.   அவருக்கு அசாம் மாநிலத்தில் மிகுந்த வரவேற்பு  உள்ளது.   அவருடைய பாடல்களால் அசாம் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதாக பாஜகவினரே அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.

அவர் இந்த மசோதாவை கைவிடும்படி பாஜகவை வலியுறுத்த அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவாலுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கைக்கு பதில் ஏதும் கிடைக்காததால் ஜுபின் கர்க் தன்னுடைய முகநூல் பக்கத்தில்,

“அன்புள்ள சர்பானந்த சோனாவால்,

நான் சில தினங்களுக்கு முன்பு ஒரு கோரிக்கை விடுத்தேன்.   அதற்கு தாங்கள் பதில் அளிக்க முடியாத அளவுக்கு பிசியாக உள்ளீர்கள் என நினைக்கிறேன்.   உங்களுக்கு காட்டப்படும் கருப்புக் கொடிகளை எண்ணுவதற்கே உங்களுக்கு நேரம் இல்லை என்பதையும் நான் அறிவேன்.

குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என மக்கள் விரும்புவதை நான் தெரிவித்தேன்.  ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை.   ஆகவே எனது பாடல்கள் மூலம் நீங்கள் பெற்ற வாக்குகளை திரும்ப அளித்து விடுங்கள்.   நானும் எனது  பாடலுக்காக பெற்ற ஊதியத்தை திரும்ப அளித்து விடுகிறேன்.”

என பதிந்துள்ளார்.