கௌகாத்தி

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வோம் என அசாம் முன்னாள் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2016ஆம் வருடம் ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மனு ஒன்று அளிக்கப்பட்டது.   அதில் மற்ற நாடுகளில் இருந்து குடியேறிய இந்து, சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின், பார்சி,  மற்றும் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள் இந்தியக் குடியுரிமை பெற தகுதியானவர்கள் என மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.   இதற்கு அசாம் உள்ளிட்ட பல எல்லைப்புற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

கடந்த 1971ஆம் வருடம் மார்ச் மாதம் 21 அன்று நள்ளிரவுக்கு மேல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்தவர்களுக்கு குடியுரிமை தரக்கூடாது என அசாம் மாநிலம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.   வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடி புகுந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதை அசாம் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பாஜகவின் கூட்டணிக் கட்சி அசாம் கன பரிஷத் கட்சியின் தலைவரும் அசாம் மாநில முன்னாள் முதல்வருமான பிரபுல்ல குமார் மகந்தா நேற்று முன் தினம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது, “இந்தியக் குடியுரிமை சட்ட திருத்தம் அசாம் கொள்கைகளுக்கு எதிரானது.   இதை நாங்கள் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஏற்கனவே அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளோம்.

கடந்த 1971 ஆம் வருடத்துக்கு பின் வந்த அனைத்து வங்க தேசத்தை சேர்ந்தவர்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.  அவர்கள் இந்து, இஸ்லாமியர் மற்றும் எந்த மதத்தினராக இருப்பினும் சட்ட விரோதமாக இந்தியாவில் வசிக்கக் கூடாது.   இந்த நிலைக்கு மாறாக இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை அளிப்பது நாட்டை சீர் குலைக்கும் நடவடிக்கை ஆகும்.   இதை மத்திய அரசு தொடர்ந்தால் அசாம் கன பரிஷத் கட்சி பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகும்” என அசாம் முன்னாள் முதல்வர் பிரபுல்ல குமார்  கூறி உள்ளார்.

”தற்போது பாஜகவுக்கு அடி மேல் அடி கிடைத்து வருகிறது.  ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சி  பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகியது.   சிவசேனா கட்சியும் விலகி உள்ளது.   கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத ஆகிய இரு கட்சிகள் இணைந்ததால் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தும் ஆட்சி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.   இது நிச்சயம் வரும் 2019 பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிர் விளைவை அளிக்கும்” என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.