துப்ரி: அசாம் மாநிலத்தில் வகுப்புவாத கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுபவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்து உள்ளார். இரவு நேரங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 8ல் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தின்போது பசுக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும், சில இடங்களில் மாட்டிறைச்சி வீசப்பட்டதாகவும் முதலமைச்சர் சர்மா குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக பல்வேறு இடங்களில், 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, துப்ரியில் உள்ள கோயில் அருகே நேற்று முன்தினம் மாட்டிறைச்சி வீசப்பட்டதாக கூறிஇந்துக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட போது அப்பகுதியில் உள்ள சந்தையில் காய்கறி வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர்களை ஒரு கும்பல் தாக்கியது. இதனால் அப்பகுதியில் இனக்கலவரம் ஏற்படும் அபாயம் நிலவியது. இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் மத்திய மற்றும் மாநில போலீஸ் படைகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, துப்ரி மாவட்டத்தை வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக மாற்ற நபி பங்களா என்ற குழு பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெள்ளிக்கிழமை (ஜூன் 13, 2025) குவஹாத்திக்கு மேற்கே 290 கிமீ தொலைவில் உள்ள துப்ரி நகரில் வகுப்புவாத பதற்றத்தை சரி செய்ய சூட்டிங் ஆர்டர் வழங்கினார். அதன்படி, “இரவு நேரங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ள உத்தரவிடப் பட்டு உள்ளது.
மாலை 6 மணிக்குப்பின் வன்முறையில் ஈடுபவர்களை கண்டதும் சுடப்படுவார்கள் என்றவர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை மீட்டெடுக்க விரைவு அதிரடிப் படை (RAF) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். வன்முறை குற்றவாளிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தவர், மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இந்தப் பதட்டங்களுக்குக் காரணம்” என்று தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வன்முறையை தடுக்க தங்களது நிறுவங்கள் மற்றும் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து, அரசுக்கும், காவல்துறைக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.