அசாம் மாநிலத்தில் தனது இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய ஒற்றுமை நீதி பயணம் அசாம் மாநிலத்தில் நுழைந்த நிலையில் ஆளும் பாஜக அரசு காங்கிரஸ் கட்சியினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ராகுல் காந்தியை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் பயணத்தில் கலந்து கொள்ள வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அசாம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மீது நடத்திய தாக்குதலில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது மேலும் ஜெய்ராம் ரமேஷின் கார் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த சம்பவத்தை அடுத்து இன்று காலை நாகன் பகுதியில் துவங்கிய யாத்திரை 15ம் நூற்றாண்டில் அசாம் மாநிலத்தில் வாழ்ந்த மதகுரு ஸ்ரீமந்தா சங்கர்தேவ் ஆலயத்துக்கு செல்ல முயன்றது.

ஆனால், ராமர் கோயில் குடமுழுக்கு விழா காரணமாக மற்ற அனைத்து கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பிற்பகல் வரை அனுமதி இல்லை என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து ராகுல் காந்தியின் யாத்திரை தடுக்கப்பட்டதை அடுத்து ஆலயத்தின் முன்பு ராகுல் காந்தி தலைமையில் தர்ணா நடத்தி வருகின்றனர்.

மதம் சார்ந்த சடங்குகளை செய்ய எந்த ஒரு அரசும் யாருக்கும் தடைபோட முடியாது என்று கூறிய ராகுல் காந்தி ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படும் வரை தர்ணாவில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.