இஸ்லாமாபாத்: இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம் என ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் ஒப்புதல் வாக்குமலம் கொடுத்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானப்படை தளம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே, போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது,” என பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் கூறியுள்ளார்.
இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்து சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதற்கு பதிலளிக்கும் விதமாக, மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில், இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களில் உள்கட்டமைப்பை அழித்தது.
இருப்பினும், இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்களுக்கு வழிவகுத்ததால் இருதரப்பு பதட்டங்களை அதிகரித்தது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்தியத் தரப்பிலிருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய ராணுவம், பாகிஸ்தானில் நூர் கான் விமானப்படை தளம் மற்றும் ஷோர்காட் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனால் மிரண்டு போன பாகிஸ்தான் செய்வதறியாது திகைத்தது.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவ தளபதி மூலம் இந்திய ராணுவ தளபதியிடம், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதனை இந்தியா ஏற்றுக் கொண்டதால், நான்கு நாட்களாக நீடித்த சண்டை, மே 10ல் நிறுத்தப்பட்டது. ஆனால், இந்தியாவில், இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சி உள்பட பல கட்சிகள் அரசியல் செய்தன.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதும்போல இதிலும் மூக்கை நுழைத்து, நான்தான் இரு நாடுகளுக்கும் இடையே போரை நிறுத்தும்படி மத்தியஸ்தம் செய்தேன் என தம்பட்டம் அடித்ததார்.- போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தார்.“போரை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் உங்கள் வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் எச்சரித்தேன். உடனே போரை நிறுத்தி விட்டார்கள்” என்று ட்ரம்ப் மார்தட்டினார்.
ஆனால், இதனை மறுத்த மத்திய அரசு ”டிரம்ப் சொன்னது உண்மை அல்ல; பாகிஸ்தான் ராணுவ தளபதி தான் நமது தளபதியுடன் போனில் பேசி, போர் நிறுத்தம் செய்ய முன்வந்தார். பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்று, போரை நிறுத்த இந்தியா சம்மதித்தது” என்று விளக்கம் அளித்தது. மேலும் சமீபத்தில் ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடியும், தங்களது பிரச்சினையில் மற்ற நாடுகளின் தலையீடு தேவையில்லை என்று கூறியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், போர் நிறுத்தத்தை தாங்கள் தான் கோரினோம் என்பதை பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் ஒப்புக் கொண்டு உள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இஷாக் தர், அன்றைய தினம், துரதிர்ஷ்டவசமாக, இந்தியா மீண்டும் அதிகாலை 2:30 மணிக்கு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் நூர் கான் விமானப்படை தளத்தையும், ஷோர்கோட் விமானப்படை தளத்தையும் தாக்கினர். இதனால், அவை கடும் சேதமடைந்தது.
இதைத்தொடர்ந்து, அடுத்த 45 நிமிடத்தில் சவுதி இளவரசர் பைசல் என்னை அழைத்தார். அப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் ரூபியோவுடன் நான் பேசியது குறித்து அறிந்ததாக தெரிவித்தார். மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசவும், இந்தியா தாக்குதலை நிறுத்தினால், பாகிஸ்தானும் நிறுத்த தயாராக இருக்கிறது என்று தெரிவிக்க தனக்கு அதிகாரம் உள்ளதா என்று அவர் கேட்டார். அதற்கு நான், ” ஆம் சகோதரரே, உங்களால் முடியும்” என்றேன். பின்னர் அவர் என்னைத் திரும்ப அழைத்து, ஜெய்சங்கரிடம் அதையே தெரிவித்ததாக கூறினார், அதன்பிறகே போர் நிறுத்தப்பட்டது என்றார்.
இதன்மூலம், இந்தியாவில் போர் நிறுத்தம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது.
நூர்கான் விமானப்படை தளம் என்பது பாகிஸ்தானின் முக்கியமான ராணுவ தளங்களில் ஒன்றாகும். ராவல்பிண்டிக்கும், இஸ்லாமாபாத்துக் கும் இடையே இது அமைந்துள்ளது. ராணுவ நடவடிக்கைகள் மற்றும் விஐபி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. ஷோர்கோட் விமானப்படை தளம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் மசூத் அக்தர், சிந்தூர் நடவடிக்கையின் போது வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (AWACS) விமானத்தை இழந்ததை ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இஸ்லாமாபாத்தின் போலாரி விமானப்படை தளத்தில் இந்தியாவின் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களில் ஒன்றில் நீண்ட தூர ரேடார் கண்காணிப்பு மற்றும் வான்வெளியைக் கட்டுப்படுத்தும் விமானம் அழிக்கப்பட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.