சென்னை:

மிழகத்தில்,மருத்துவ படிப்பில், மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்திய மருத்துவ கழக செயலர், சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு புதிய சட்டம் இயற்றியது. அதன்படி, தமிழகத்திலும், நடப்பு ஆண்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவிகித இடஒதுக்கீடு முறை அமலில் உள்ள நிலையில், மேலும் 10 சதவிகிதம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கன்னியாகுமரி மாவட்டம் இளஞ்சிறையை சேர்ந்த கிருஷ்ண நாயர் என்பவர், தாம் நீட் தேர்வில் 320 மதிப்பெண் பெற்றிருப்பதாகவும், முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசு சட்டப் படி, தமிழ்நாடு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், ஆனால்,   தமக்கு இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாததால் தனது மருத்துவ கனவு சிதைந்துவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில், நீதிபதி சுரேஷ்குமார்  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனு குறித்து, இந்திய மருத்துவ கழக செயலர், சுகாதாரத்துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.