துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.  அதன்படி 2023ல் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . கடந்த 2020ம் ஆண்டு  15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்  இலங்கையில் நடக்க இருந்தது. ஆனால்,  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த போட்டி இந்த ஆண்டு (2021) ஜூனில் நடத்தப்படும் என கூறியிருந்தது. ஆனால், தற்போது  கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருவதால், போட்டியை நடத்த முடியாத சூழல் ஏ ற்பட்டு உள்ளது. இதனால்,  ஆசிய கோப்பை கிரிக்கெட்டை நடத்த வாய்ப்பில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதையடுத்து, ‘ ஆசிய கோப்பை போட்டி 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய அணிகளுக்கு இந்த ஆண்டு இறுதிவரை தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் இந்த ஆண்டில் இந்தபோட்டியை நடத்த சாத்தியம் இல்லை என்றும், அடுத்த ஆண்டு (2022)  ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் இருப்பதால் 2021-ம் ஆண்டுக்குரிய ஆசிய போட்டியை 2 ஆண்டுகள் ஒத்திவைத்து 2023-ம் ஆண்டில் நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.