’’ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க 6 மாதமாகச் சதி செய்த சச்சின்..’’

ராஜஸ்தானில் முதல்- அமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-அமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்  இருந்து வந்தது.

கடந்த வாரம் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதால் , துணை முதல்வர் பதவியில் இருந்து, சச்சின்  நீக்கப்பட்டார்.

இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், சச்சின் பைலட் மீது அசோக் கெலாட் நேற்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

’’பா.ஜ.க.வுடன் இணைந்து கடந்த 6 மாதமாகவே சச்சின், எனது ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்..ஆனால் நான் இதனை வெளிப்படையாகச்  சொன்னபோது யாரும் நம்ப வில்லை’’ என்று ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சச்சின் மீது அசோக் கெலாட், சில தடித்த வார்த்தைகளையும் பிரயோகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

’’சச்சின் பைலட், எதற்கும் பயனற்றவர்.அவருக்கு  எந்த வேலையும் செய்யத் தெரியாது. மற்றவர்களிடையே சண்டையை மூட்டி விடுபவர்’’ என்று கடுமையாக விமர்சித்த அசோக் கெலாட்’’ முகத்தை அப்பாவி போல் வைத்துக்கொண்டு, தெளிவாக ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசி இத்தனை நாட்களாக ஊடகங்களை ஏமாற்றி வந்துள்ளார், சச்சின்’’ என்று ஆவேசமாகப் பேசி முடித்தார், அசோக் கெலாட்.

-பா.பாரதி.