சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல ஆந்திராவில் பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இன்று நடைபெற இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இந்த புயல், இன்று மாலை ஆந்திர மாநிலம்  காக்கிநாடா- விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 95 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசும் என்றும், ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த காற்று வீசும் என்றும், அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து,  இன்று நடைபெறவிருந்த 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், நாளைமுதல் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அசானி புயல் காரணமாக  சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப் பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை விமான நிலையத்தில்  இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் சென்னையில் இருந்து அந்தமான் புறப்படும் விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.