சென்னை: “தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன்; கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன் என தமிழக சட்டப்பேரவையில், கருணாநிதி உருவப்படத் திறப்பு விழாவில் பேசிய முதல்வர்  மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உருக்கமான பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி,  சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

இந்த விழாவிற்கு முன்னிலையேற்று உரையாற்றிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாளாக இந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் இனி வரும் காலங்களில் சிறப்புப் பெறவிருக்கிறது என்பதை நான் பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல – இந்திய வரலாற்றிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு நம்முடைய குடியரசுத் தலைவர் இன்றைக்கு வருகை புரிந்திருக்கிறார்.

நம்முடைய குடியரசுத் தலைவரைப் பொறுத்தவரையில், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் நலனை முன்னிறுத்தி, வாதாடுவதில், போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்; இந்திய ஆட்சிப் பணி கிடைத்தும், அதனை ஏற்காமல், வழக்கறிஞராகப் பணியாற்றியவர். சமூகநீதியைத் தனது வாழ்வின் இலக்காகக் கொண்டவர். இத்தனைப் பெருமைகளுக்குரிய அவர், இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை தந்திருப்பது, நாமெல்லாம் பெருமைப்படத்தக்க ஒன்றாகும்.

பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்தச் சட்டமன்றம், கடந்த ஒரு நூற்றாண்டில் பல புதுமையான சட்டங்களை, முன்னோடித் திட்டங்களை உருவாக்கி, சமதர்ம சமூகத்தைப் படைத்திட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.

1919-ஆம் ஆண்டில் ‘மாண்டேகு – செம்ஸ்போர்டு’ சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்நாளைய மாகாண சட்டமன்றங்களில் முதன்முதலில் இடம்பெறத் தொடங்கினர். அச்சட்டமே பின்னர் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உருவாவதற்கு வழிகோலியது. அந்தச் சட்டத்தின்படி, சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு 1920-ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் திராவிட இயக்கத்தின் தலைமகனான நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது.

1921-ஆம் ஆண்டு கன்னாட் கோமகன் அவர்களால் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டதன் பவளவிழா நிகழ்ச்சியும், அதேபோல 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் முதன்முதலாக 1937-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஏற்படுத்தப்பட்ட சென்னை சட்டமன்றப் பேரவையின் வைரவிழா நிகழ்ச்சியும், 1997-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசால் சிறப்புடன் கொண்டாடப்பட்டதை, நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்த வேளையில் நான் நினைவுகூர விரும்புகிறேன்.

அதே வேளையில், இந்தப் பெருமைமிகு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு சில சட்டங்களை எடுத்துச் சொல்லவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றிய பெருமை சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு உண்டு. அதோடு, தேவதாசி ஒழிப்புச் சட்டம், மகளிருக்கு உள்ளாட்சிப் பதவிகளில் உரிய இடஒதுக்கீடு, பெண் குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டம் என மகளிர் நலன் காப்பதில் நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை உருவாக்கித் தந்த பெருமை கொண்டது.

அதுமட்டுமல்ல -பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தனித் தீர்மானம் நிறைவேற்றியது; சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தைச் செல்லுபடியாக்கிடச் சட்டம் வகுத்தது; நிலச் சீர்திருத்தச் சட்டம் உருவாக்கியது; மே தினத்தை அரசு விடுமுறை ஆக்கிட வழிவகுத்தது; மாநில சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றியது; பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கிட சட்டம் கண்டது; டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்திட சட்டம் நிறைவேற்றியது; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது –

என பார் போற்றும் பல்வேறு சட்டங்களை, தீர்மானங்களை நிறைவேற்றிய பெருமை இந்தச் சட்டமன்றத்திற்கு உண்டு. சீர்மிகு இந்தச் சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் இன்றைக்கு நாமெல்லாம் பங்கேற்றுள்ளோம் என்பதே நாம் எண்ணிப் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நிலைநாட்டப்பட்ட மாபெரும் வளாகம் இது. அரசு முத்திரையில் “வாய்மையே வெல்லும்’’ எனத் தமிழ்மொழி அரியணையில் அமர்ந்து அலங்கரிப்பதையும் கண்டு மகிழ்கிறோம் நாம். மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், ஏழை எளியவர் என விளிம்பு நிலை மக்களின் நலன் காக்க இந்தச் சட்டமன்றம் தொடர்ந்து செயலாற்றி வருகின்றது.

நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்தச் சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது ஜனநாயகக் கடமையை செம்மையாக நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நினைவுகூர்ந்து, அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்திருப்பது அனைத்திற்கும் முத்தாய்ப்பானதாகும்.

1957-ஆம் ஆண்டு இந்த மன்றத்திற்கு முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தனது கன்னிப்பேச்சில் நங்கவரம் உழவர்கள் பிரச்சினை குறித்துப் பேசி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து முத்திரை பதித்தவர் கலைஞர் அவர்கள். முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, அமைச்சராக, உறுப்பினராகப் பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணியாற்றி, பலரது பாராட்டுகளையும், அன்பையும் பெற்றவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்த மண்டல் ஆணைய அறிக்கையைச் செயல்படுத்த தீர்மானம், தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட காவிரி நடுவர் மன்றத்தை அமைக்கக் கோரும் தீர்மானம், தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிட, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம், மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் இருந்த இடர்களை நீக்க நுழைவுத் தேர்வை ஒழிக்கும் சட்டம் போன்ற பல்வேறு புரட்சிகர – சீர்திருத்தத் தீர்மானங்களையும், சட்டங்களையும் இயற்றி, தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தலைவர் கலைஞர் அவர்களை, அவரது 50 ஆண்டுகால சட்டமன்றப் பணிகளைப் பாராட்டி நடைபெற்ற பொன்விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய பொதுவுடைமைப் போராளியும், முன்னாள் மக்களவைத் தலைவருமான திரு. சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள், “கொள்கைகளுக்காகவும், இலட்சியங்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, அதற்குத் தீங்கு வரும்போது எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தவர் கலைஞர்” –

என்று பாராட்டிப் பேசியதை நினைத்துப் பார்க்கும்போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தகையதொரு மாபெரும் தலைவராக விளங்கினார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.

‘உடன்பிறப்பே! உன் இயல்பு என்மீது அன்பைப் பொழிவது!

என் இயல்பு உன் அன்புக்குக் கட்டுப்படுவது!

நம் இயல்பு கழகத்தைக் கட்டிக் காப்பது!’

– என்று தனது காந்தக் குரலால் தமிழ்நாட்டு மக்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அவரது திருவுருவப் படத்தைப் பார்க்கும்போது – சர் பிட்டி தியாகராயர் – டி.எம்.நாயர் – டாக்டர் நடேசனார் தொடங்கி இனமானப் பேராசிரியர் வரையிலான பல மாபெரும் தலைவர்களின் முகங்களை நான் காண்கிறேன்.

முன்னாள் முதலமைச்சரான அவரது திருவுருவப் படத்தைப் பார்க்கும்போது, இன்றும் நம் முன்னால் இருந்து வழிநடத்தும் ஒரு முதலமைச்சராக அவரைக் காண்கிறேன்.

இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் அவர்கள், தமிழன்னையின் தலைமகனான கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன் – கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்.

I take this opportunity to thank our Honourable President for gracing this house with his presence and making this historic event more special.

I also like to express my sincere gratitude to our Honourable Governor of Tamil Nadu for presiding over.

ஜனநாயக மாண்பைக் காக்கும் தமிழ்நாடு சட்டமன்றம் இன்னும் பல நூற்றாண்டு விழாக்களைக் கண்டு, அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.