வுகாத்தி

தேசிய குடியுரிமை பட்டியல் கெடு நெருங்குவதால் கடும் வெள்ளத்திலும் தங்கள் இருப்பிடத்தை விட்டு பலர் வெளியேறாமல் உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.   உலகின் புராதன தலம் என புகழ்  பெற்ற காசிரங்கா பகுதியில் 95%க்கு மேல் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ளது.  இந்த பகுதியில் 5 காண்டாமிருகங்கள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட விலங்குகள் வெள்ளத்தால் மரணம் அடைந்துள்ளன.    ஏராளமான மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர்

சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய தேசிய குடியுரிமை பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.   அதில் இடம் பெறாதவர்களை அகதிகள் எனக் கருதி அகதிகள் முகாமுக்கு அரசு அனுப்ப உள்ளது.  இந்த  பட்டியல் அமைக்கக் கடைசி தேதியாக ஜூலை 31 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் குடியுரிமை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களின் இல்லத்தில் நேரடி சோதனை நடத்தி பட்டியலை இறுதி செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பலர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர்.   கடந்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களை வேறு இடத்துக்கு மாற்ற தேசிய மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.   ஆயினும் தேசிய குடியிருப்பு பட்டியல் கெடு காரணமாக பலரும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.    இவர்களில் பெரும்பாலானோர் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இது போல் ஏராளமானவர்கள் தங்கல் இருப்பிடத்தை விட்டு வெளியே வராத நிலையில் மீட்புப் படையினர் ஒரு சிலரை மட்டுமே பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.   வெள்ளத்தில் உள்ளவர்களிடம் தங்களது தொலைபேசி எண்களை கொடுத்துள்ள மீட்புப்படையினர் அவர்கள் மனம் மாறினால் உடனடியாக தங்களை அழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.