சென்னை

ஆதார் இணையம் அனுமதி மறுப்பால் சென்னை நகரில் 100 இ சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளன.

சென்னை நகரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷான் மூலம் இ சேவை மையங்கள் நடந்து வருகின்றன. இதை தவிர ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கும் இ சேவை மையங்கள் நடத்த அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை விவரங்களைத் திருத்தும் பணிகள் இந்த இ சேவை மையம் மூலமாக நடந்து வருகிறது. ஆதார் இணைய தளத்தில் இந்த மாறுதல்கள் செய்ய ஊழியர்களுக்கு அனுமதி அவசியமாகும்.

இவ்வாறு அனுமதியைப் பெறத் தகுதித் தேர்வு உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றோருக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாதம் ரூ.6750 ஊதியம் அளிக்கப்படுகிறது. இவர்களது வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 வரை ஆகும். இவ்வாறு அனுமதி பெற்றவர்கள் விவரங்களை அளிப்பதில் செய்யும்  தவறுகளை ஆதார் இணையம் கணக்கெடுத்து வருகிறது. இந்த தவறுகள் தொடர்ந்து நடக்கும் போது அவர்களுடைய அனுமதி ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு ரத்து செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுவது கிடையாது. கடந்த மாதம் அரசு கேபிள் நிறுவன இ சேவை மையங்களில் உள்ள 123 ஊழியர்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் 20 பேர் அனுமதி இழந்துள்ளனர். ஒவ்வொரு இ சேவை மையத்திலும் இரு ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். சில இடங்களில் இருவருமே அனுமதி இழந்துள்ளனர். இதனால் நகரில் சுமார் 100 இ சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு கேபிள் நிறுவன இயக்குனர் சங்கர், “ஆதார் இணையத்தின் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் போதுமான ஊழியர் இல்லாத நிலை  ஏற்பட்டுள்ளது, இதற்காக திறனுள்ள பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வு எழுத அனுப்பப்பட உள்ளனர். விரைவில் இந்த ஊழியர் பற்றாக்குறை தீர்ந்து இ சேவை மையங்கள் வழக்கம் போல் இயங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.