பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் சொகுசு கப்பலில் நடந்த இரவு விருந்தில் போதை மருந்து உபயோகித்ததாக இரண்டு வாரங்களுக்கு முன் மும்பை போதைமருந்து தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது செய்தார்.

இந்த விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதிய திருப்பமாக இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் பிரபாகர் ரஃகோஜி சயில் “விசாரணை அதிகாரி சமீர் வான்கடே-வால் என் உயிருக்கு ஆபத்து” என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்யான் கான் மீது போடப்பட்டுள்ள இந்த போதை மருந்து வழக்கில் பிரபாகர் ரஃகோஜி சயில் தவிர அவரை வேலைக்கு வைத்திருக்கும் அவரது முதலாளியான கே.பி. கோஸவி மற்றும் கோஸவி-யின் நண்பர் பனுஷாலி உள்ளிட்ட சிலர் சாட்சிகளாக உள்ளனர்.

பனுஷாலி மகாராஷ்டிரா மாநில பாரதிய யுவ மோர்ச்சா-வை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கில் சந்தேகம் இருப்பதாக சிவசேனா ஆரம்பம் முதல் கூறிவருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பிரதான சாட்சியான பிரபாகர் ரஃகோஜி சயில், “இந்த வழக்கில் இருந்து ஆர்யான் கானை விடுவிக்க கே.பி. கோஸவி 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாக” பிரமாண பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரால் உண்மை நகல் என்று சான்றளிக்கப்பட்ட அந்த பிரமாண பத்திரத்துடன், ஆர்யான் கானுடன் கே.பி. கோஸவி உரையாடும் வீடியோ ஒன்றையும் ஆதாரமாக வெளியிட்டிருப்பதால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கே.பி. கோஸவி-யின் மெய்காப்பாளராக கடந்த சில மாதங்களாக வேலை செய்துவரும் சயில் “சம்பவத்தன்று பல்வேறு இடங்களுக்குச் சென்ற கோஸவி மும்பை துறைமுகத்தில் பயணிகள் நுழைவாயிலில் என்னை நிற்கவைத்ததுடன், என்னிடம் சில புகைப்படங்களைக் கொடுத்து இதில் உள்ள நபர்கள் கப்பலில் ஏறியதை உறுதி செய்ததும் தனக்கு தகவல் தருமாறு கூறினார்”.

பின்னர், போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆர்யான் கானை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதை உறுதி செய்து கொண்ட கோஸவி, சாம் டி சோஸா என்பவரைக் கூட்டிக்கொண்டு என்னையும் அழைத்துச் சென்றார்.

அப்போது கே.பி. கோஸவி – சாம் டி சோஸா இருவரும் உரையாடியதில் இந்த வழக்கில் இருந்து ஆர்யான் கானை விடுவிக்க நடிகர் ஷாஹ்ருக்கானின் மேலாளரிடம் 25 கோடி ரூபாய் கேட்பது என்றும், விசாரணை அதிகாரி சமீர் வான்கடே-வுக்கு 8 கோடி ரூபாய் போக மீதமுள்ள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு 10 கோடி ரூபாய் என மொத்தம் 18 கோடி ரூபாயாவது தேவைப்படும் என்று கூறினார்.

பிரபாகர் ரஃகோஜி சயில்

இந்நிலையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் இடைத்தரகராக செயல்பட்ட எனது முதலாளி கே.பி. கோஸவி காணாமல் போனதையடுத்து அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதே சந்தேகமாக உள்ளது.

மேலும், கே.பி. கோஸவி மாயமான நிலையில் விசாரணை அதிகாரியால் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட கூடும் என்ற அச்ச உணர்வு உள்ளதால் இந்த பிரமாண பத்திரத்தை நான் வெளியிடுகிறேன் என்று பிரபாகர் ரஃகோஜி சயில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வழக்கில் முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட இருக்கும் இந்த பிராமண பத்திரம் குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கூறுகையில், “இதற்கு தகுந்த பதிலடி தரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.