ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த 3 டிஎஸ்பிக்கள் திடீர் விடுவிப்பு…!

Must read

சென்னை: தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக ஏமாற்றியதாக. தமிழக அரசு ரெய்டு நடத்தி சீல் வைத்த, ஆருத்ரா நிதி நிறுவனம் மீதான மோசடி வழக்கை விசாரணை நடத்தி வந்த 3 டிஎஸ்பிக்கள் திடீரென அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாற்று நபர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கை விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது ஆரத்ரா கோல்டு நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை  அமைந்தகரையில் உள்ளது.  ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்து, சுமார் 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், பொதுமக்களிடம் வசூலித்த டெபாசிட் பணத்தை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததால், இந்த விவகாரம் பிரச்சினையை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும்  வழக்குப்பதிவு செய்து அதிரடியாக சோதனை நடத்தினர். கடந்த  மே மாதம் 24 ஆம் தேதி ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில்  நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, சுமார் 100 கோடி ரூபாய் சொத்துக்களும், 70-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் இந்த வழக்கு விசாரணை அதிகாரியைத் தொடர்புகொள்ளலாம் என்றும், முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளவர்கள் @eowtn7of2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என்றும் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆரூத்ரா முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த பொருளாதார குற்றப்பிரிவைச் சேர்ந்த   கண்ணன், சம்பத் மற்றும் சுரேஷ் ஆகிய 3 டி.எஸ். பி-க்கள் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த எஸ்.பி விஜயகுமார் விடுவிக்கப்பட்டு மற்றொரு எஸ்.பி-யான ஜெயச்சந்திரன் என்பவரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 டிஎஸ்பிக்கள் விடுவிக்கப்பட்டு இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகஅரசு ஆருத்ரா நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

More articles

Latest article