ருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது. இவ்வூர் திருச்சுழி சாலையில் சொக்கலிங்கபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் செங்காட்டிருக்கை இடத்துவளி என்றழைக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை நகரத்தின் கிழக்கில் அமைந்துள்ள சொக்கநாதர் கோயில் என்னும் சிவன் கோயிலில் உள்ள பிற்காலபாண்டியர் கல்வெட்டுகள் இவ்வூரின் வணிக முக்கியத்துவத்தை விளக்குவதாயுள்ளன.

முதலாம் சடையவர்மன் குலசேகரன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட இக்கோயில் அவனது இளவல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் முற்றுப்பெற்றது. இச்சிவன் கோயிலின் சுவரில் 12 கல்வெட்டுகளும், கோவிலின் எதிரில் வெட்டப்பட்டுள்ள ஊருணியில் ஒன்றும், அருகிலுள்ள வாழவந்தம்மன் கோயிலில் மூன்றும், திருச்சுழி சாலையில் இராமலிங்கர் நூற்பு ஆலை அருகில் ஒன்றுமாக மொத்தம் 17 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகளின் முதல் தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் மூலம் இவ்வூரின் பெயர் இடத்துவளி என்பதும் இது செங்காட்டிருக்கை என்னும் உட்பிரிவைக் கொண்ட வெண்புநாடு எனும் நாட்டுப் பிரிவுக்குள் அடங்கியிருந்தது என்பதும் பெறப்படுகிறது. கோயில் இறைவனின் பெயர் குறள்மணி ஈசுவரர் என்பதாகும். பிற்பாண்டிய மரபின் மன்னன் முதலாம் சடையவர்மன் குலசேகரனின் 18ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1207ல்) இக் கோயிலின் அர்த்தமண்டப நிலைக்கால் கைக்கோளன் குழைஞ்சான் சங்கன் என்பவனால் கொடையளிக்கப் பட்டுள்ளது.

இவன் புரவுவரி மாராயன் என்னும் நிலவரி அதிகாரியாகச் செயல்பட்டவன். இவன் கோயில் திருமடை விளாகத்தில் வாழ்ந்தவன் என்பதால் இக்கோயில் குலசேகரன் காலத்திற்கும் முன்பாகவே தோற்றம் பெற்றுப் பின்னர் விரிவு படுத்தப்பட்டது எனக் கருதலாம். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கோயில் முழுமை பெற்ற போது தேவ கோட்டங்களில் துர்க்கையார், லிங்கபுராணதேவர், அருந்தவஞ்செய்த நாச்சியார் போன்ற திருமேனிகள் செய்து வைக்கப் பட்டுள்ளன. ரெட்டை அழகன் இடத்துவளிதட்டான் என்பவன் துர்கையாரை எழுந்தருளுவித் தான். தென்னிலங்கை வளஞ்சியர் என்னும் வணிகக்குழுவைச் சேர்ந்தவனும் இலுப்பையூர் என்னும் ஊரின் கிழவனுமான சேகல் சேவகத்தேவன் என்பவன் இலிங்கபுராண தேவரையும், அருந்தவஞ்செய்த நாச்சியாரையும் செய்தளித்தான். வீரபாண்டியன் பெருந்தெரு, விக்கிரமபாண்டியன் பெருந்தெரு, பழிவிலங்கிப் பெருந்தெரு, ஸ்ரீவல்லபப்பெருந் தெரு எனப் பல பெருந்தெருக்கள் இவ்வூரில் வணிக மையங்களாகச் செயல்பட்டுள்ளன. இங்குள்ள ஸ்ரீவல்லபப் பெருந்தெருவுக்கு தேசி ஆசிரியப்பட்டணம் என்ற பெயரும் வழங்கியுள்ளது. சிவன் கோயிலின் எதிரில் (தெற்கில்) அமைந்துள்ள ஊருணி கி.பி.1193ம் ஆண்டில் திருவாலவாயுடையான் சோழகங்கன் என்னும் அதிகாரியின் மகன் அழகன் அருளாளப் பெருமாளால் வெட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் இலுப்பையூர், சிறுமணக்குளம், பெரியமணக்குளம், கும்பனூர் போன்ற அண்டை ஊர்களின் பெயர்கள் அறியப்படுகின்றன.