சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணியத் தலங்களில் ஒன்று உத்திரகோசமங்கை திருத்தலம். இங்கு ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவபெருமான் பச்சை மரகத நடராஜராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 உத்திரகோசமங்கை உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் என்று கூறப்படுகிறது.  ‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள்.
ஆதி காலத்தில்… அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.
ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான உத்தரகோசமங்கை. இக்கோசமங்கை கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.
இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது.
மங்களநாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும். மங்களேஸ்வரி அம்பாளுக்கு நான்கு திருக்கரங்கள். இந்த அம்மனை ஐந்து செவ்வாய்க்கிழமைகள் ராகுகால வேளையில், எலுமிச்சை பழ தீபமேற்றி, ஒன்பது எலுமிச்சைப் பழங்களை உதிரியாக அன்னையின் காலடியில் சமர்ப்பித்து வந்தால், செவ்வாய்தோஷம் நிவர்த்தி ஆகும். திருமணத் தடை அகலும்.
மாணிக்கவாசகர் இத்தலத்தில் சிவலிங்க வடிவிலும், நின்ற கோலத்திலும் காட்சி தருகிறார். ‘நீத்தல் விண்ணப்பம்’ என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.
நாகதோஷம் நீக்கும் தலம்
வேத வியாசர், காகபுஜண்டர், மிருகண்டு, மயன் முதலியோர் இத்தல ஈசனை வணங்கி பேறு பெற்றுள்ளனர். இங்கு ஸ்படிக லிங்கம், மரகத லிங்கம் உள்ளன. தினந்தோறும் இந்த லிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான், ஆறுமுகங்களுடனும், பன்னிரு கைகளுடனும் மயில் மீது அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மயில், பாம்பை தன் கால்களினால் பிடித்து வைத்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர் இந்த முருகப்பெருமான் ஆவார். தொடர்ச்சியாக 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலங்களில் இத்தல விநாயகர், ஈசன், அம்பாள், முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் நாகதோஷங்கள் அகலும் என்று கூறப்படுகிறது.
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள். மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
இத்தலம் ‘ஆதி சிதம்பரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அம்பிகைக்காக இங்கு அறையில் ஆடிய திருத்தாண்டவத்தை தான் நடராஜபெருமான், தில்லை அம்பலத்தில் முனிவர்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஆடுகிறார். எனவே இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர்தான், ஆதி நடராஜர் என்றும் கூறப்படுகிறது. நடராஜ பெருமாள் ஐந்தரை அடி உயரம். முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அதுவும் 32 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்படும்.
நேற்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதுபோல, ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம். ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே காண முடியும் என்பதால்   ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கூடி திருகோசமங்கை சென்று  எம்பெருமான்அருள் பெற்றனர்.
விழாவின் நிறைவாக இன்று (புதன்கிழமை) அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தன காப்பு பூசப்படுகிறது. அதன் பின்னர்  நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
நடராஜர் கோவிலுக்கு பக்கத்தில் தனியே சகஸ்ர லிங்கம் உள்ளது. மூலத் திருமேனியில் நெடுக்குக் கீற்றுகள் உள்ளன. சகஸ்ர எண்ணிக்கையில் உட்புறத்தில் தல மரமான இலந்தை மரத்தின் வேரூன்றி உள்ளது.
ஆலயத்திற்குள் மங்கள, அக்னி தீர்த்தங்கள் உள்ளன. கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தம், மொய்யார் தடம் பொய்கைத் தீர்த்தம், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் ஆகியவை இருக்கின்றன. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர். முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.