காந்திநகர்:
புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு குஜராத் விசாயிகள் 2000 பேர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

குஜராத் சட்டசபையில் மாநில அரசு வெளிப்படுத்திய தகவல்களின்படி, புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் சுமார் 5% நிலம் இன்னும் கையகப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

அகமதாபாத் மற்றும் மும்பைக்கு இடையேயான அதிவேக ரயில் நெட்வொர்க் (புல்லட் ரயில்) பணிகளுக்கான இன்னும் எவ்வளவு நிலங்கள் கையகப்படுத்த வேண்டியுள்ளது என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர், மாநில அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த வருவாய் அமைச்சர் கவுசிக் படேல், இந்த திட்டத்திற்கு மொத்தம் 73,64,819 ஹெக்டேர் நிலம் தேவை என்று தெரிவித்தார். தேவையான நிலங்களில், இதுவரை 69,98,888 நிலம் கையகப்படுத்தப்பட்டது, இன்னும் 3,65931 ஹெக்டேர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார். கையகப்படுத்தப்பட வேண்டிய நிலம் மொத்த நிலத்தில் 5% ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிலம் கையகப்படுத்தல் பணிக்கு எவ்வளவு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமரின் திட்டத்திற்கு மொத்தம் 1,908 விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் சூரத் சேர்ந்த விவசாயில் 940 பேர் என்றும், பருச் சேர்ந்த 408 பேர், வல்சாத் சேர்ந்த 236 பேர், நவ்சாரி சேர்ந்த 209 பேர், வதோதரா சேர்ந்த 26 பேர்மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்த நான்கு விவசாயிகள் என்று அமைச்சர் தெரிவித்தார்.