சென்னை:

ஆர்ஜே.பாலாஜி நடிக்கும் ‘எல்.கே.ஜி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருவதால், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி, எல்கேஜி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிமுக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்படும் வகையில்  போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் செங்கோல் வழங்கும் காட்சி போன்ற புகைப்படம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.

அரசியல் படமான ‘எல்கேஜி’ என்ற படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். பிரபு என்பவர் இயக்கி உள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு அரசின் இலவசங்களை விமர்சித்து வெளியான போஸ்டர்

இந்த படத்தில் முழுநேர அரசியல்வாதியாக காமெடி கலந்த வேடத்தில் பாலாஜி நடித்து வரு கிறார். ஏற்கனவே வெளியான எல்கேஜி படத்தின் போஸ்டரில்,  இலவச டிவி, மிக்சி, கிரைண்டர், ஆடு மாடுகள் போன்ற படங்களும் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல இலவச கலைஞர் டிவி படம் போடப்பட்டிருப்பதால் திமுகவினரிடையேயும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள படம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  படத்தில் இருந்து முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. லியோன் ஜேம்ஸ் இசையில் முதல் பாடல் குடியரசு  தினத்தன்று ரிலீசாக இருப்பதாக தெரிவித்து உள்ளது. அதைத் தொடர்ந்து, தரமான சம்பவம் 1 என்று குறிப்பிட்டு ஆர்.ஜே. பாலாஜி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எம்ஜிஆர் – ஜெ.வை விமர்சித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்

அந்த  போஸ்டரில் இடம் பெற்றுள்ள படம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போல் அமைந்துள்ள தால்  அ.தி.மு.க. வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித் துள்ள அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகி பிரவீன் குமார், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘எல்.கே.ஜி’ படம் ரிலீசானால் பாலாஜியின் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பன்னிடுறேன் என்று கூறியிருந்தார்.

அதற்கு பதில் டிவிட் போட் ஆர்ஜே பாலாஜி,  ’இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா அண்டாவாக பண்ணி மாஸ் காமிங்க…’ என்று சிம்பு கூறியதையும் சேர்த்து  கிண்டலாக பதில் தெரிவித்துள்ளார்.

இது அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே சர்க்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததால், படம் ஓடும் தியேட்டர்கள் தாக்கப் பட்டதால், பட தியேட்டர்கள் படத்தை நிறுத்தியது.  இந்த நிலையில்,  ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி. படம் வெளியாகுமா அல்லது அதிமுகவினரால் முடக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.

இதற்கிடையில், சிம்பு ரசிகர்களும் ஆர்.ஜே.பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  தேவை இல்லாமல் எங்கள் அண்ணன் சிம்புவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.