டெல்லி: மதம்மாற வலியுறுத்தியதால் அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக எழுந்துள்ள விவகாரத்தில்  தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தலையிட்டு உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க  தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதி உள்ளது.

அரியலூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் படித்து வந்த பிளஸ்2 மாணவி, அங்குள்ள வார்டனால், மதம் மாற்றச்சொல்லி வற்புறுத்தியதால்  கடந்த 9-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான மாணவி கொடுத்த வாக்குமூலம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.   சிகிச்சைக்கு பின் மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில், மாணவியை விடுதி வார்டன் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதுடன் அதை மறுத்த அவருக்கு உளவியல் ரீதியாக சித்திரவதை செய்ததால் மனமுடைந்த  மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக மாணவியின் தந்தை, மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். ஆனால், மாணவி மதமாற்றத்தினால் தற்கொலை செய்யவில்லை என்று அம்மாவட்ட எஸ்.பி. கிறிஸ்தவ பள்ளிக்கு ஆதரவாக பேட்டிக்கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் பூதாகாரமானதாக எழுந்துள்ள நிலையில், பாஜக மற்றும் இந்து அமைப்பினரும் தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பில் டைஃபி எனப்படும்  புரட்சிகர மாணவர் என்ற இளைஞர் முன்னணியினரைக் கொண்டு மாணவியின் பெற்றோருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

டைஃபி அமைப்பு பல இடங்களில் மாணாக்கர்களுக்கு ஆதரவாக போராடி வந்த நிலையில், அரியலூரில் மாணவியின் மரணத்துக்கு எதிராக போராடியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரங்க் கனூங்கோ  தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கெல்பட்டியில் அமைந்துள்ள Sacred Heart மேல்நிலைப் பள்ளி  மாணவ, மாணவியரை சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே புகாரின் அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள் அப்பள்ளியில் நடந்துள்ளதால் இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையாக தாக்கல் செய்து ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

மதமாற்ற வற்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் மவுனம் காத்து வருகின்றன. ஆனால், இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மத மாற்றம் வற்புறுத்தலால் தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்யவில்லையாம்! மாவட்ட எஸ்.பி. தகவல்