சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை  24ந்தேதி நேரடி விசாரணையாக நடத்தப்படும் என கூறி வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில், பங்கேற்ற பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்தலை விரைந்து அறிவிக்க வேண்டும் என்றும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில்,  கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது எனவும், தள்ளிவைக்க கோரியும் தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்  பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் வழக்கின் விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என்றும், தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகரித்து உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஐ.சி.யூ. அனுமதியும் அதிகரிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது குறித்தும், ஜனவரி 27ந்தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மனுதாரர் வழக்கறிஞர் பிரபாகரன்,  மாநிலத்தில் உள்ள நிலையை பொறுத்து தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2021ல் அனுமதி அளித்துள்ளதாக என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் 4 மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், அந்த அவகாசம் ஜனவரி 27ஆம் தேதியுடம் முடிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அன்றைய தினம் இந்த வழக்கு மட்டும் நேரடி விசாரணை முறையில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.