மதுரை:
க்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பானத் தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின்  மதுரைக் கிளை விசித்திரமானத் தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான மனுதாரர் தமது தரப்பு நியாயத்தை தமிழில் கூறியதை ஏற்க முடியாது எனக் கூறி அவரது வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இது நீதி வழங்க மறுப்பதற்கு சமமானதாகும்.

மதுரை ஐகோர்ட்டு கிளை
மதுரை ஐகோர்ட்டு கிளை

புதுக்கோட்டை நகராட்சி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களும், வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் பெயர்களும் இருப்பதால் அவற்றை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையருக்கு ஆணையிடக் கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர்  மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ராமமோகனராவ்,  எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது  மனுதாரர் அவரது தரப்பு வாதங்களை தமிழில் முன்வைத்துள்ளார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  ‘‘நீதிமன்ற நடைமுறைகளின்படி தமிழில் வாதிட முடியாது. ஆங்கிலத்தில் தான் வாதிட வேண்டும். இல்லாவிட்டால் வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வேண்டும்’’ என்று கூறியுள்ளனர். ஆனால், தமக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், தமிழிலேயே வாதிட விரும்புவதாக மனுதாரர் ஜெயப்பிரகாஷ் கூறியதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அவர் தொடர்ந்த மனுவை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்துள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகளின் இந்த தீர்ப்பு ஏற்க முடியாதது என்பதுடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், நாடு முழுவதுமுள்ள உயர்நீதிமன்றங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுக்கும் எதிரானது ஆகும். கடந்த 2013 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிஷா பானு என்ற பெண்மணி வளைகுடா நாட்டில் தவிக்கும் தமது கணவரை மீட்க ஆணையிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் அவரது வழக்கறிஞர் பகத்சிங் தமிழில் வாதிட்டதை ஏற்க முடியாது எனக்கூறி நீதிபதி மணிக்குமார் இவ்வழக்கை 10.06.2013 அன்று தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் 11.10.2013 அன்று தீர்ப்பளித்த  நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு,‘‘ சென்னை மற்றும்  மதுரை உயர்நீதிமன்ற அமர்வுகளில் தமிழில் வாதிட எந்த தடையும் இல்லை. தமிழில் வாதாடியதற்காக தள்ளுபடி செய்யப்பட்ட அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்’’ என்று தீர்ப்பளித்தது. மேலும், 2010 ஆம் ஆண்டிலும், 2013 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதியளித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. முழு உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளிப்பது சரியல்ல.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இராமமோகன் ராவுக்கு தமிழ் தெரியாது என்பதால் இத்தகைய தீர்ப்பை அளித்ததாக கூறப்படுவதை ஏற்க முடியாது. ஒருவேளை நீதிபதிக்கு தமிழ் தெரியவில்லை என்றால், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவது தான் சரியானதாக இருக்கும். மாறாக, தமக்கு மொழி தெரியாது என்பதற்காக வழக்கை தள்ளுபடி செய்வது மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தட்டிப்பறிக்கும்  செயலாகும். இதை நீதித்துறை அனுமதிக்கக் கூடாது.
அரசியலமைப்பு சட்டத்தின் 348-ஆவது பிரிவின்படி உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆங்கிலத்தில் மட்டும் தான் வாதிட முடியும் என்றாலும், பல மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியில் வாதிடுவது அனுமதிக்கப்பட்ட மரபாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்  தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த மரபை பின்பற்றி வருகின்றனர். நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஏ.பி.ஷா, ஏ.கே. கங்குலி, கோகலே, ஆர்.கே. அகர்வால், இக்பால் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தபோது அவர்கள் முன்னிலையில் மனுதாரர்கள் எவரேனும் தமிழில் விவரங்களைக் கூறினால், அதன் ஆங்கில மொழியாக்கத்தை தங்களின் அமர்வில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளிடம் கேட்டறிந்து அதனடிப்படையில் நீதி வழங்கியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலும் இதே அணுகுமுறையைத் தான் கடைபிடித்து வருகிறார். இந்த மரபுக்கு மாறாக மதுரை உயர்நீதிமன்ற அளித்துள்ளத் தீர்ப்பு தமிழை அவமதிக்கும் செயலாகும்.
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற அமர்வுகளில் தமிழில் வாதிட முடியாத அவல நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் ஆகும். ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அம்மாநில மொழியை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் கடந்த 06.12.2006 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டிருப்பதும், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் தமிழக அரசு உறங்குவதும் தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் இழைக்கப்படும் மன்னிக்க முடியாத துரோகங்கள். இந்நிலை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், அலகாபாத், பிகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 4 மாநில உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக இந்தியை அறிவித்திருப்பதைப் போல சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.