மும்பை: பெட்ரோல் & டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால், அவர்களை தேச துரோகிகள் என்று சித்தரிப்பதா? என்று கேள்வியெழுப்பி, பாரதீய ஜனதாவை சாடியுள்ளார் சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.

உலகச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருந்தும், நாட்டில் பெட்ரோல் & டீசல் விலைகளை கடுமையாக உயர்த்தி வருகிறது மோடி அரசு. விலை உயர்வு குறித்து கேள்வி கேட்டால், தேச துரோகிகள் என்று சித்தரிக்கிறார்கள் பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர்.

இந்நிலையில் சிவசேனா மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கூறியதாவது, “பெட்ரோல் விலை உயர்வின் மூலம் மேற்குவங்க பிரச்சாரத்திற்கு செல்கிறதா? எரிபொருள் விலை உயர்வுக்கு முந்தைய அரசே பொறுப்பு என மத்திய அரசு மீண்டும் மீண்டும் கூறுகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக முழு பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பணவீக்கம், ஊழல், தேசிய பாதுகாப்பு தொடர்பான உள்ளிட்ட எந்தவொரு கேள்வியை எழுப்பினாலும் இதே பதிலைத்தான் மத்திய அரசு தெரிவிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்புபவர்களை தேச துரோகிகளாக சித்தரிப்பதா?” என்றுள்ளார்.

சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊடுருவவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வந்தார். அவரே தற்போது சீன துருப்புக்கள் நம் மண்ணிலிருந்து பின்வாங்குவதாகக் கூறுகிறார். அப்படி என்றால், சீனப் படைகள் ஊடுருவியுள்ளது. நம் பிரதமர் பொய் சொல்லியிருக்கிறார்.

சீன துருப்புக்கள் பின்வாங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது பாதுகாப்பு அமைச்சகத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. ஆனால் சீன ஊடுருவல் குறித்து அரசாங்கம் ஏன் பொய் சொன்னது? எதிர்க்கட்சிகள் ஊடுருவல் பற்றி கேள்வி எழுப்பியபோது பிரதமரும், பிற மூத்த அமைச்சர்களும் பொய் சொன்னார்கள். தற்போது அனைத்தும் தெளிவாகிவிட்டன. படைகள் வாபஸ் குறித்து தற்போது அரசே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.