ஆக்ரா
தாஜ்மகாலில் கோயில் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என தொல்பொருள் ஆய்வகம் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது/
ஆக்ராவில் இருக்கும் தாஜ்மகால் உலகப் புகழ் பெற்றது. உலக அதிசயங்களில் ஒன்றாக பட்டியலிடப் பட்டுள்ளது. கடந்த 2015ஆம் வருடம், ஆக்ராவை சேர்ந்த ஆறு வழக்கறிஞர்கள் இந்த தாஜ்மகாலை குறித்து ஆக்ரா நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் தாஜ்மகால் முன்பு தேஜோ மகாலய் என்னும் சிவன் கோயிலாக இருந்ததாகவும், அதன் மேல் தாஜ்மகால் கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதன்படி அந்த கோயிலுக்கு உரிமையாளராக உள்ள சிவபெருமானின் பெயரில், தனது நிலத்தை திரும்பப் பெற அவருடைய உரிமையைக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மேலும் அங்கு வழிபாடு நடத்தவும் அனுமதி கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து ஆராய்ந்து பதில் அளிக்குமாறு, தொல்பொருள் ஆய்வகம், கலாச்சாரத்துறை அமைச்சகம், அரசின் உள்துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டது. கலாச்சாரத்துறை அமைச்சகம், அங்கு கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் தென்படவில்லை என பாராளுமன்றத்தில் நவம்பர் 2015ல் அறிவித்தது.
தற்போது ஆக்ரா நீதிமன்றத்துக்கு தொல்பொருள் ஆய்வகம் ஒரு ஆராய்ச்சி அறிக்கையை அளித்துள்ளது. அதில், “தேஜோ மகாலய் என்னும் ஆலயம் அங்கிருந்ததற்கான அடையாளமே எதுவும் அங்கில்லை. மற்றும் அந்த இடத்தில் சமாதியை தவிர வேறெதுவும் இல்லை. அங்கு வழிபாடு நடந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அது மட்டுமின்றி, தாஜ்மகாலில் இஸ்லாமியரும் எந்த வழிபாடும் நிகழ்த்தவில்லை” என கூறப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், ”தொல்பொருள் ஆய்வகம் அளித்துள்ள அறிக்கை ஆதாரமற்றது, அந்த அறிக்கையில் பல தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. நாங்கள் நீதிமன்றத்தில், அதற்கு எதிரான எங்களின் வாதங்களை அடுத்தடுத்த விசாரணைகளில் தெரிவிப்போம்.” என கூறியுள்ளனர்.
நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்தி வைத்துள்ளது.