டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தம்மை சிலர் பாஜகவில் சேர கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்/

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி டில்லியில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரிடம் தலா ரூ.25 கோடி பேரம் நடைபெற்றிருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியது தொடர்பான ஆதாரங்களை அளிக்குமாறு நோட்டீஸ் அளித்தனர். இந்த புகாரின் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையைத்  தொடங்கியுள்ளனர்.

இது டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ஜ.க.வில் சேருமாறு தன்னை சிலர் கட்டாயப்படுத்தியதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இன்று டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,-

”எனக்கு எதிராக எந்த ஒரு சதித் திட்டத்தையும் தீட்டலாம். நானும் உறுதியாக இருக்கிறேன். நான் ஒருபோதும் வளைந்து கொடுக்கப்போவது இல்லை. பா.ஜ.க.வில் சேர்ந்து விடுங்கள்.. விட்டு விடுகிறோம் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால், ஒருபோதும் பா.ஜ.க.வில் சேரமாட்டேன் என்று அவர்களிடம் நான் திட்டவட்டமாகக் கூறினேன். நான் ஒருபோதும் பா.ஜ.க.வில் சேரப்போவதே இல்லை”

என்று தெரிவித்துள்ளார்.