சென்னை: தனது அம்மா மீதான அளவுகடந்த பாசத்தை மெய்ப்பிக்கும் வகையில் பளிங்கு கற்களால் நினைவாலயம் கட்டி திறந்துள்ளார் ஆஸ்புகார் புகழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவரது முதல் நினைவுநாளில் அது தொடர்பான உருகமான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

உலகளவில் புகழ்பெற்றவர்  தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். சிறுவயது முதலே இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர். திலீப் குமார் என்கிற இயற்பெயர் கொண்ட இவர் பின்னாளில் ரஹ்மானாக மாறினார்.  இவர் தன்னுடைய 23வது வயதில் மதகுரு, காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவினார். அதுபோல, குடும்பத்தினரும் இஸ்லாமுக்கு மாறினர். குடும்பத்தினர் மீது அதிக பாசம் கொண்டவரான ரஹ்மான்,   தனது  தந்தையின் இறப்பினால் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரமாக இசை உலகிற்குள் நுழைந்திருக்கிறார். இசையின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டார். பின்னர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி வந்தார்.

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியிருக்கிறார். பள்ளிக்கல்வி கூட முடிக்காதவர், தன்னுடைய இசைப் புலமையால் பின்னாளில் லண்டன் இசைக்கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசை கற்றார்.

இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அவருடைய கூடுதல் பலம். 1992 முதல் 2000ஆம் ஆண்டு வரை அவர் இசையமைத்த படங்கள் அனைத்துமே அவருக்கு ஃப்லிம் ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தது.

கடைக்கோடி ஏழைச் சிறுவனைப் பற்றிய திரைப்படம் ‘ஸ்லம்டாக் மில்லியினர்’. இந்தப் படத்திற்கு இசையமைத்ததற் காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருதை தன்னுடைய இரண்டு கைகளாலும் உயர்த்திப் பிடித்து ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது தாயார் கரீமா பேகம். இவர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 20ந்தேதி காலமானார். அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல நாட்கள் தவித்த ஏ.ஆர்.ரஹ்மான், தனது தாயின் நினைவை போற்றும் வகையில் பிரமாண்டமான நினைவாலயம் கட்ட முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கினார்.

பளிங்கு கற்கலாலும் பாரம்பரிய முறைப்படியும் கட்டப்பட்டுள்ள அந்த நினைவாலயம், அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 28ந்தேதி  திறந்து வைத்ததுடன், தனது நினைவலைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.