5ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் கைதாகும் வரை கல்லூரிக்கு திரும்பப்போவதில்லை கலாக்ஷேத்ரா மாணவிகள் திட்டவட்டம்.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா இசை மற்றும் நாட்டியக் கல்லூரியில் பாலியல் தொல்லை நடைபெறுவதாகக் கூறி வகுப்புகளைப் புறக்கணித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து கல்லூரிக்கு ஏப்ரல் 6 வரை விடுமுறை அறிவித்தது நிர்வாகம்.

மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டத்தை அடுத்து கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்திய மாநில மகளிர் ஆணைய தலைவியிடம் 4 பேர் மீது மாணவிகள் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் கல்லூரியின் முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த பாலியல் புகாரை அடுத்து கலாக்ஷேத்ரா கல்லூரியைச் சேர்ந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.

அதேவேளையில் புகாருக்கு உள்ளான ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேரும் விசாரணைக்கு ஆஜராகும் வரை கல்லூரிக்குள் நுழைய மாநில மகளிர் ஆணையம் தடை விதித்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 5 முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று கலாக்ஷேத்ரா கல்லூரி நிர்வாகம் இன்று திடீரென அறிவித்துள்ளது.

இதனை கண்டித்துள்ள மாணவிகள் கல்லூரி நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் தங்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரணை நடத்தாமல் கல்லூரி தேர்வு குறித்து திடீரென அறிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறிய அவர்கள் இதுகுறித்து முழுமையான விசாரணை நடைபெறும் வரை வகுப்புகளுக்கோ தேர்வெழுதவோ போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது