சென்னை: மக்களவை தேர்தலை ஒட்டி, தமிழ்நாட்டில் நாளை மறுதினம் (ஏப்ரல் 19ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால்,  இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின்  18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் நாளை மறுதினம், அதாவது  ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு  நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, மற்றும் நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதனால், மாநிலம் முழுவதும்  அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  தேர்தலையொட்டி, இன்றுமுதல் 3 நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளை ஜூன் 4ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடக்கும் நிலையில், வரும் 17ஆம் தேதி மாலை ஐந்து மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. இதன் காரணமாகத் தேர்தல் பிரசாரம் முடிந்த நாளில் இருந்து வாக்குப்பதிவு நடக்கும் ஏப்ரல் 19 வரை தமிழகத்தில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.  அதை ஏற்றுத் தமிழக அரசு இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதன்படி,  தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஏழு கட்ட தேர்தல் முடிந்து பிறகு வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது