சென்னை:

மிழகத்தில் பிரபலமான மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் நாளான ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறி உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் திட்டமிட்ட படி தேர்தல் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

ஏப்ரல் 18ந்தேதி   புகழ்பெற்ற மதுரை  சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இதனால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாது என்றும், மேலும் அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் பண்டிகையான பெரிய வியாழன் வருவதாலும் தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, பதில் அளித்த தேர்தல் ஆணையம்,  சித்திரை திருவிழா காரணமாக மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது  என்றும், தமிழக அரசின் முடிவை கேட்ட பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாகவும், கூடுதல் நேரம் மட்டுமே வழங்க முடியும் என்றும் விளக்கமளித்துள்ளது. மேலும் கிறித்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி களை மாற்ற முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து இன்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பபட்ட 3 மனுக்களையும்  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவது உறுதியாகி உள்ளது.