மதுரை: மதுரையில் தோப்பூர் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு அனுமதிக்கோரி சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போதுதான் அதன் கட்டுமான பணிகளை தொடங்க அனுமதி கோரிப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காகச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், மதுரை எய்ம்ஸ் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் சர்ச்சைகளும் உருவானது. பின்னர் பிரச்சினைகள் தீர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரை எம்.பி உள்பட பலர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நடைபெறாமல் இருந்ததால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எய்ம்ஸ் விவகாரத்தை திமுக கையில் எடுத்து வெற்றி வாகையும் சூடியது.
இதற்கிடையில், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணியை தொடங்காமலேயே, மத்தியஅரசு, இந்த மருத்துவமனை கல்லுரிக்கான 50 எம்பிபிஎஸ் இடத்துக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி, மதுரையில் வகுப்பறை வசதியில்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில், தற்காலிகமாக வகுப்புகளை தொடங்கி நடத்தி வருகிறது. . தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துக்கல்லூரி மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக படித்து வருகின்றனர். ஆனால் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
மதுரை எய்ம்ஸ் அறிவித்து 9 ஆண்டுகள் ஆகியும், அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளும் கடந்த நிலையில், தற்போதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு எய்ம்ஸ் நிர்வாகம் அனுமதி கோரியுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கட்டுமான பணிகளுக்கான அனுமதி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.
மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.