சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சர்ச்சையைத் தொடர்ந்து, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்த திருச்சி வரை சில மாவட்டங்களுக்கு விரைவு பேருந்து சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்து சேவையை இன்று அமைச்சர் சிவசங்கர்  மாதவரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். அதற்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இயக்குவதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது. போதிய கழிப்பிடமோ, உணவகமோ, பேருந்து நடத்தும் இடமோ இல்லாத கிளாம்பாக்கத்தை அவசர அவசரமாகத் திறந்து மக்களை அலைக்கழிக்கிறது.  சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்த பேருந்து முனையத்திற்கு செல்லவே இரண்டு முதல் 3மணி நேரம் ஆவதுடன், பொதுமக்களின் பணமும் வீணாகிறது. மேலும், அங்கு செல்ல முறையான சென்னையில் பல பகுதிகளில் இருந்து முறையான பேருந்து வசதிகள் செய்யப்படாத நிலையில், அவசரம் அவசரமாக பேருந்து நிலையத்தை திறந்த திமுக  அரசின் இந்த நடவடிக்கை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு தற்போது, வடசென்னை மக்களுக்காக  சிறிய மாற்றத்தை செய்துள்ளது.

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது நிலையில், கோயம்பேட்டில் இயக்கப்பட்ட தென் மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு,  வடசென்னை மக்களின் சிரமத்தை தவிர்க்க மாதவரத்தில் இருந்து  திருச்சி வரையிலான பல்வேறு மாவட்டங்களுக்கு விரைவு பேருந்துகளை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் மாதவரத்தில் இருந்து பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. *கோயம்பேட்டில் இயக்கப்பட்ட தென் மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்றவர்,  வடசென்னை மக்களின் சிரமத்தை தவிர்க்க மாதவரத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறினார்.

மேலும், மாதவரத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 160 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20சதவீத பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படும்.  என்றவர் 40 நிமிடங்கள் முதல் 1மணி நேர கால இடைவெளியில் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

மாதவரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் ரெட்டேரி, அம்பத்தூர், மதுரவாயல் பைபாஸ் வழியாக பெருங்களத்தூர் செல்லும்.

மாதவரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 40 ரூபாயும், ரெட்டேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 35 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 30 ரூபாயும், மதுரவாயலில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 25 ரூபாயும், பெருங்களத்தூரில் இருந்து 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக பல்வேறு ஊர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துடன் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்படும் வாகன நெரிசலைகுறைக்கும் வகையில் மாதவரம் பேருந்து நிலையம், ஆந்திரா உள்பட சென்னையின் மேற்கு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.  கடந்த 2018-ம் ஆண்டு மாதவரத்தில் ரூ.94.16 கோடியில் நிறுவப்பட்டது.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, ஆந்திரா, திருப்பதி மற்றும் காளஹஸ்தி மற்றும் சில மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான தனிப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி, சேலம் உள்பட சில மாவட்டங்களுக்கு பேருந்துகளை தமிழ்நாடு அரசு இயக்குகிறது.