டில்லி:

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறினார்.

2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டில்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ நேர்மையான அதிகாரிகளை குறிவைத்து வழக்கில் இருந்து விலக்கினர். 2ஜி முறைகேடு வழக்கில் நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வக்கீல்கள் முறையாக வாதாடவில்லை.

2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் பாடம் கற்றுகொள்வார் என நினைக்கிறேன். இந்த தீர்ப்பு பின்னடைவு அல்ல. இப்போது ஊழலுக்கு எதிராக போராட வேண்டும். ஊழலுக்கு எதிராக போராடுவதில் சட்ட அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹ்த்கி இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். சில குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக அட்டர்னி ஜெனரல் ரோஹ்த்கி வாதாடினார். அவர் நியமனத்தின் போது எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி முதலில் இருந்த உற்சாகம் படிப்படியாக குறைந்தது பின்னர் அது மிகவும் மோசமடைந்தது’’ என்றார்.