சென்னை: 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கிய ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவ மனை மருத்துவர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி திடீர் மரணம் அடைந்தார். சுமார் 75 நாட்கள் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், அவரது திடீர் மரணம் அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதை முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையம் இதுவரை உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்து வர்கள், அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளது. ஆனால், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ நிர்வாகம் மட்டும் விசாரணைக்கு ஆஜராக மறுத்த நிலையில், சுமார் 2 ஆண்டுகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக உத்தரவிட்டது. இதற்காக எய்ம்ஸ் மருத்துவர்களையும் ஆறுமுகசாமி ஆணையத்தின் உதவிக்காக நியமித்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரையின்படி, 6 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் இன்றுமுதல் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பினர். அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று அப்போலோ மருத்துவர் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது, 2016ம் ஆண்டு ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்கும் முன்பே அவருக்கு உடல்நலக்குறைவு பாதிப்பு இருந்து வந்தது என்றும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், அவர் ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் என்று தெரிவித்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, சாட்சிகளிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்ய உள்ளார். இந்த விசாரணையின் போது எய்ம்ஸ் பரிந்துரைத்த மருத்துவர்கள் குழு வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கிறார்கள்.
[youtube-feed feed=1]