சென்னை: சளி, காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருகிறார்களா? அதுகுறித்த விவரங்களை பதிவேற்றுங்கள்  என சென்னையில் உள்ள சுமார் 231 தனியார் மருத்துவமனை களுக்கு சென்னை  மாநகராட்சி திடீர் கடிதம் எழுதி உள்ளது.

கொரோனா 3வது அலை மெதுவாக பரவத்தொடங்கி உள்ளதாகவும், அக்டோபரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சகாதார அமைப்பு, இந்திய பேரிடர் அமைப்பு போன்றவைகள் அச்சம் தெரிவித்து உள்ளன. இதற்கிடையில், கொரோனா 2வது அலை கட்டுக்குள் உள்ளதால், செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க தமிழக அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அத்துடன் கொரோனா வழிகாட்டுதல்களையும் முறையாக பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரம் கேட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பி உள்ளது.

இதுதொடர்பாக  வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில்,  சளி. காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படும் நபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களை வழங்காமலும், மருத்துவமனை வளாகங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்காமலும் இருந்த மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 231 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, இனி வரும் காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.