சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர்பாபாவின் 2 ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது மனுவில், தனக்கு ஆண்மை கிடையாது; அதனால் தன்மீதான புகாரில் உண்மை என கூறி  ஜாமின் கோரிய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அருகே  கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. தன்னை பெருமாளாக காட்டிக்கொண்டு, டான்ஸ் சாமியாராக வலம் வந்த இவர்மீது, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அவர் மீது 3 போக்சோ வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகளில் இருந்து ஜாமின்கோரி பாபா தரப்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த நிலையில், அவரது ஜாமின் மனு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதில்,  கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆன்மீகம் சார்ந்த தொடர்பு நடத்துவதற்காக மட்டுமே பள்ளிக்கு சென்று வந்ததாக குறிப்பிட்டிருந்ததுடன், தான் ஒரு ஆண்மையற்றவன் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்ய இயலாது என்றும் கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட பாபாவை,  சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காவல்துறையினர் ஆண்மை பரிசோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில், தற்போது அவருக்கு ஆண்மை இல்லை என முடிவு வந்ததாகவும், அதை சுட்டிக்காட்டி சிவசங்கர் பாபா மனுவில் குறிப்பிட்டு ஜாமின் கோரியதாகவும் கூறப்படுகிறது.

சிவசங்கர் பாபா ஆன்மீகப் பணிக்கு வருவதற்கு முன்பாகவே அவருக்கு திருமணமாகி மகன், மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.